‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்குடன் பேசவில்லை’ - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பு வாதம்

‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்குடன் பேசவில்லை’ - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பு வாதம்
Updated on
1 min read

சென்னை: தன்னை சிறையில் அடைத்து பிறப்பித்த உத்தரவை எதிர்த்து விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையில், ‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பேசவில்லை' என்று அவர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜீ.வி.மார்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாகப் பேசியதாக தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர்.

ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, தன்னை சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், ஜாமீன் வழங்கக் கோரியும் மார்க்கண்டேயன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், “சட்டப்பேரவை பூட்டப்படும் எனக் கூறிய முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில்தான் பேசினார். கைதுக்கான காரணங்களை தெரிவிக்காதது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதால், மனுதாரரை நீதிமன்ற காவலில் சிறையிலடைத்து தூத்துக்குடி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது.

கைதுக்கு முன் விசாரணைக்கு அழைத்து நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும். ஆனால், எந்த நோட்டீஸும் வழங்கப்படவில்லை. ஜூலை 18-ஆம் தேதி நடந்த சம்பவத்துக்கு 19-ஆம் தேதி நள்ளிரவில் புகார் அளிக்கப்பட்டு, 20-ஆம் தேதி அதிகாலை வழக்குப் பதிவு செய்து, அன்றைய தினம் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எந்த ஆரம்பகட்ட விசாரணையும் நடத்தப்படவில்லை. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பேசவில்லை” என வாதிட்டார்.

வாதங்கள் முடிவடையாததை அடுத்து, விசாரணையை நீதிபதி இளந்திரையன் செவ்வாய்க்கிழமைக்கு தள்ளிவைத்தார்.

‘பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நோக்குடன் பேசவில்லை’ - திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தரப்பு வாதம்
‘ஒரு லட்சம் அரசு வேலை, சிலிண்டருக்கு ரூ.300 மானியம், 5 புதிய மாவட்டங்கள்’ - பாமக நிழல் பட்ஜெட் அம்சங்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in