

சென்னை: ‘ஒரு லட்சம் பேருக்கு அரசுவேலை, மது விலக்கு, பழைய ஓய்வூதிய திட்டம், சிலிண்டருக்கு ரூ.300 மானியம், 5 புதிய மாவட்டங்கள், முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி’ உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
பாமகவின் 24-வது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தலைவர் அன்புமணி சென்னை தி.நகரில் வெளியிட்டார். அருகில் பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, எம்எல்ஏ வைத்தியலிங்கம், செய்தி தொடர்பாளர் பாலு மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பாமகவின் நிழல் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
• 2026-27 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.6,71,891 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் வருவாய் வரவை விட ரூ.2,04,530 கோடி அதிகம். கனிம வளங்களை சிறப்பான முறையில் கையாளுவதன் மூலம், வரி அல்லாத வருவாயாக ரூ.2,17,945 கோடி ஈட்ட திட்டம் வகுத்திருப்பதால்தான் இந்த அளவுக்கு அதிக வருவாய் சாத்தியமாகிறது.
• நடப்பாண்டின் மொத்த செலவினம் ரூ.6,96,149 கோடியாகவும், வருவாய் செலவினம் ரூ.6,10,712 கோடியாகவும் இருக்கும். வருவாய் செலவினத்தில் ரூ.50,000 கோடி நிலுவையில் உள்ள கடனை அடைப்பதற்காக அசலாக செலுத்தப்படும். இதன்படி, அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக அரசின் தற்போதைய கடன் சுமை கட்டுக்குள் கொண்டுவரப்படும்.
• சமூகநீதி சர்வே: ஆளுநர் உரையில் உறுதியளிக்கப்பட்டவாறு தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே பணிகள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தொடங்கப்படும்.
• ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 5 ஆண்டுகளில் 6 லட்சம் பேருக்கு அரசு வேலைகள் வழங்கப்படும். முதல்கட்டமாக 2026-27ஆம் நிதியாண்டின் எஞ்சியுள்ள ஆறு மாதங்களில் 1 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்.
• அரசுப் பள்ளிகளில் முதல்கட்டமாக 2026-27ஆம் ஆண்டில் 25,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 5,000 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட குரூப்-4 பணிகளுக்கு 17,000 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
• சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்கப்படும். அதிகபட்சமாக, ஆண்டுக்கு 6 சிலிண்டருக்கு இந்த மானியம் கிடைக்கும்.
• அக்டோபர் 2ஆம் தேதி முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும். டாஸ்மாக் மதுக்கடை பணியாளர்களுக்கு மாற்றுவேலை வழங்கப்படும்.
• குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகை ரூ.2,000ஆக உயர்த்தப்படும். அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படும்.
• காஞ்சிபுரம், திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நடப்பாண்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கும் பணி தொடங்கப்படும்.
• கருவுற்ற பெண்களுக்கான மகப்பேறு கால நிதிஉதவி ரூ.25,000ஆக உயர்த்தப்படும்.
• பெயர்ப் பலகைகளை தமிழில் எழுதாத கடைகளுக்கு ரூ.10,000 அபராதம். 3 முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் வணிக உரிமம் ரத்து செய்யப்படும். குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட தனித் தமிழ் பெயர்கள் பட்டியல் வெளியிடப்படும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்படும்.
• பழைய ஓய்வூதியத் திட்டம் 2027ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படுத்தப்படும்.
• ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் ஒரே கட்டமாக வரும் அக்டோபர் மாதம் நடத்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடத்தப்படும்.
• நிர்வாக வசதிக்காக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கும்பகோணம், கடலூர் மாவட்டத்தில் இருந்து விருத்தாசலம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செய்யாறு அல்லது ஆரணி, கோவை மாவட்டத்தில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பழனி ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
• பேருந்துக் கட்டணம் உயர்த்தப்படாது: அனைத்துப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசப் பயணம்.
• காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் சதித் திட்டம் முறியடிக்கப்படும். மேகதாது அணை சிக்கலுக்கு தீர்வு காண புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படுவதை தமிழக அரசு ஏற்காது. சட்டப் போராட்டத்தின் மூலமாகவே மேகதாது அணை தடுக்கப்படும்.
• விவசாயிகளின் பயிர்க் கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். வெளிச் சந்தையில் கடன் வாங்கி, கூட்டுறவு வங்கியில் இந்தத் தொகையை அரசு செலுத்தும்.
• பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனில் ரூ.1 லட்சம் வரையிலான தொகையை அரசே செலுத்தும்.
• வறட்சி பாதிப்பால் குறுவை சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 இழப்பீடு வழங்கப்படும். வேளாண் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.24,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.
• இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் முறை கைவிடப்பட்டு, மாதம் ஒருமுறை மின்கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும். இதனால் ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீட்டிற்கு மின் கட்டணம் 54.29% குறையும்.
• சத்துணவு உட்கொள்ளும் அனைத்துக் குழந்தைகளுக்கும் மாலையில் பால் மற்றும் ரொட்டி வழங்கப்படும்.
• தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் 90% மானியத்தில் மடிக்கணினி வழங்கப்படும்.