

சென்னை: போதைப் பொருள் உட்கொண்டதால் யாராவது உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவார் என்று டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்து உள்ளார்.
இதுதொடர்பாக மண்டல ஐஜிக்கள், காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுக்கு அவர் பிறப்பித்த உத்தரவு: தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக, போதைப் பொருள் உட்கொண்டதால் யாராவது உயிரிழக்கும் சம்பவம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவார்.
அதேபோல, சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மத்திய விசாரணை அமைப்புகள் போதைப் பொருட்களை கைப்பற்றினாலும், அந்த காவல் நிலையத்தின் பொறுப்பு அதிகாரியான ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்படுவார். மெத்தனமாகச் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
குற்றங்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொதுமக்களின் கண்களுக்குத் தெரியும் வகையிலான ‘விஷுவல் போலீஸிங்’ கண்காணிப்பு பணிகளை அதிகரிக்க வேண்டும். மாவட்ட அளவிலும் சோதனைகள், தேடுதல் நடவடிக்கைகளை நடத்த வேண்டும்.
இந்த உத்தரவின்பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த செயல் அறிக்கையை டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.