

டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
சென்னை: இனி வாரம் 2 நாள் பொது மக்கள் குறைதீர் முகாம்களை நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கும் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில் கூறியிருப்பதாவது: பொதுமக்களின் புகார்கள் மற்றும் குறைகளுக்கு விரைவாகவும், திறம்படவும் தீர்வு காண வேண்டும். அதை உறுதி செய்யும் பொருட்டு வாரந்தோறும் புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 2 நாட்களில் பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் பொதுமக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். இந்த 2 நாட்களும் மக்களின் குறைதீர்ப்பு நாட்களாக கருதப்படும்.
டிஎஸ்பி-கள், எஸ்பி-க்கள், டிஐஜி-க்கள், மற்றும் ஐஜி-க்கள், அந்தந்த காவல் ஆணையர்கள் ஆகியோர் குறிப்பிட்ட மேற்கண்ட நேரத்தில் தங்களது அலுவலகங்களில் இருந்து பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்.
அவர்கள் சொல்லும் குறைகளை கேட்டு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நீதிமன்ற அலுவல், கூட்டங்களில் பங்கேற்றல், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகள் இருந்தால் பொதுமக்களை நீண்ட நேரம் காக்கவைக்காமல் தங்களுக்கு அடுத்தபடியான அதிகாரி மூலம் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அதிகாரிகளின் செயல்பாடுகள் காவல்துறை தலைமை அலுவலகத்தால் கண்காணிக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.