

ஆவடி: `காவல் குடும்பம் திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் போலீஸாரின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும்’ என டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழக காவல் துறையில் பணிபுரியும் போலீஸார் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை கருத்தில்கொண்டு டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனையின் பேரில் `காவல் குடும்பம்’ திட்டம் கடந்த மாதம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆவடி காவல் ஆணையரகத்தில் பணிபுரியும் போலீஸார், அவர்களது குடும்பத்தினரின் நலனை மேம்படுத்தும் நோக்கில் நேற்று மருத்துவ முகாம் மற்றும் மழலையர் காப்பகம் திறப்பு விழா நடைபெற்றது.
இதில், `காவல் குடும்பம்’ திட்டத்தின் தலைவர் வனிதா அகர்வால் பங்கேற்று, ஆவடி, சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தைத் திறந்து வைத்தார்.
காவலர் குடியிருப்பு அருகே உள்ள போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் பேசியதாவது: ‘காவல் குடும்பம்’ திட்டத்தின் கீழ், தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்கள் மட்டுமல்லாமல், போலீஸாரின் குழந்தைகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. போலீஸார் மீது புகார்கள் வரக்கூடாது. காவல் நிலையங்களுக்கான அவசரகால நிதி மாதம்தோறும் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை இருந்ததை ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை புதிய அரசு உயர்த்தியுள்ளது.
காவல்துறையின் சிறப்பான செயல்பாடுகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும். பொதுமக்களின் சேவையில் சிறப்பாக பணியாற்றுவோம். ஆவடியில் போலீஸாரின் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விளையாட்டு திறனையும், உடல் மற்றும் மனத்திறனையும் ஊக்குவிக்கும் வகையில், விளையாட்டுத் திடலுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆவடி காவல் ஆணையர் செந்தில்குமார், அவரது மனைவி அருள்ஜோதி, இணை ஆணையர் சிவக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.