திருப்பரங்குன்றத்தில் டிச.15 வரை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி

திருப்பரங்குன்றத்தில் டிச.15 வரை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி
Updated on: 
1 min read

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே டிசம்பர் 15-ம் தேதி வரை பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை தீபம் ஏற்றலாம் என கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த நிகழ்வையொட்டி, மலைப் பகுதியின் பாதுகாப்புப் பணி மத்திய துணை ராணுவப் படையிடம் (சிஆர்பிஎஃப்) ஒப்படைக்கப்பட்டது.

இதற்கிடையே, மலையேறிச் சென்று வழிபட பக்தர்கள் அனுமதி கோரினர். ஆனால் கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அனைவரையும் அனுமதிக்க முடியாது என சிஆர்பிஎஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் மலைத்தூணில் தீபம் ஏற்றிய போது கோயில் நிர்வாகப் பொறுப்பாளர்களின் அனுமதியுடன் 50 பக்தர்கள் மட்டுமே மலையேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று காலை முதல் மலையடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் கோயில் வழியாக பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதிக்கப்பட்டனர். சிஆர்பிஎஃப் வீரர்கள் பக்தர்களின் அடையாள அட்டைகளைச் சரிபார்த்து, பெயர் மற்றும் முகவரியைப் பதிவு செய்த பின்னரே அனுமதித்தனர். அவர்கள் மலை மீதுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால், மலைப் பாதையில் உள்ள தீபத்தூண் அமைந்துள்ள பகுதிக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தீபத்தூண், தர்கா அமைந்துள்ள பகுதிகள் மற்றும் மலைப் பாதையில் தொடர்ந்து சிஆர்பிஎஃப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, கோயில் நிர்வாக பொறுப்பாளர்களான ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்சிப்பிள்ளையார் கோயில் அருகில் மட்டும் டிசம்பர் 15-ம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4.30 மணி வரை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாக பொறுப்பாளர்கள், மத்திய பாதுகாப்பு படையினரின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பொதுமக்கள், பக்தர்கள் தீபமேற்றி சட்டம், ஒழுங்கை பாதுகாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் டிச.15 வரை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல் ஆகிறது

X