

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (நவம்பர் 30-ம் தேதி) தொடங்குகிறது. இதில் மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யப்பட்டது. இதனை அமல்படுத்துவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரலில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. இதனிடையே, நவம்பர் 30 முதல் டிசம்பர் 3-ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 26-ம் தேதி அறிவித்தார். இதன்படி இன்று, நாளை ஆகிய 2 நாட்கள் மக்களவையும், டிசம்பர் 2, 3-ம் தேதிகளில் மாநிலங்களவையும் கூடுகின்றன.
இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அனைத்து மாநிலங்களிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேச சட்டத்திருத்த மசோதாக்களில் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இருப்பினும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால் தேசிய அளவில் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், இன்று (நவம்பர் 30-ம் தேதி) காலை 11 மணிக்கு மக்களவை கூடுகிறது. அப்போது மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகியவற்றை தாக்கல் செய்ய உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற அவையில் பங்கேற்று வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை. மக்களவையில் மொத்தம் 543 இடங்கள் உள்ளன. இதில் ஏற்கெனவே 3 இடங்கள் காலியாக உள்ளன.
மேலும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.கல்யாண் பானர்ஜி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாக்கெடுப்பில் பங்கேற்க மாட்டார் என்பதாலும், 538 உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிப்பார்கள் எனக் கணக்கிடப்படுகிறது. இதன்படி, மசோதாக்கள் நிறைவேற 359 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 20 மக்களவை உறுப்பினர்கள் தேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறப்படுகிறது. அதேபோல், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவைச் சேர்ந்த 6 எம்.பி.க்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைந்துள்ளனர். இதனால் மக்களவையில் பாஜக கூட்டணியின் பலம் 320 ஆக அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநிலங்களவையிலும் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்துள்ளதாகவும், இதனால் பாஜக கூட்டணியின் பலம் 153 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற 162 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆளும் பாஜகவுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்திருப்பதால் 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே பாஜக மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் பங்கேற்க வேண்டும் என்று இரு கட்சிகளின் சார்பில் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதேபோல ஆளும் கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் சார்பிலும் கொறடா உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில் பாஜக கூட்டணி மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆதரவால் மக்களவையில் 371 எம்பிக்கள் மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.