

திண்டுக்கல்: பழநி தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் பலர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) மாலை 4 மணிக்கு மேல் நடைபெற்றது.
தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளான பக்தர்கள் திரண்டனர். அவர்கள், நேற்று அதிகாலை 2 மணி முதல் பழநி மலைக்கோயிலுக்கு செல்லும் வரிசையில் குவியத் தொடங்கினர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின் வருகை தொடர்ந்து அதகரித்தபடியே இருந்தது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீஸார், அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் திணறினர்.
கூட்டம் அதிகளவில் இருந்ததால் மலைக்கோயிலுக்கு செல்லும் பாதை ஒருவழியாக மாற்றப்பட்டது. மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர். மலைப்பாதையில் பக்தர்களை போலீஸார் அணி அணியாக பிரித்து அனுப்பினர்.
இருப்பினும், பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாகவும், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாலும் பக்தர்கள் பலர் மயங்கி விழுந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், மயங்கி விழுந்தவர்களை மீட்டு தோளில் சுமந்தபடி மருத்துவ முகாமிற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர். தரிசனத்துக்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க நேரிட்டதால், போதிய குடிநீர், கழிப்பறை வசதி இல்லாமல் பக்தர்கள் பலர் சிரமத்துக்கு உள்ளாகினர்.