

சபரிமலை அஞ்சல் நிலையத்தில் தபாலை உறவினருக்கு அனுப்பும் பக்தர். (உள்படம்) ஐயப்ப சுவாமி உருவத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை.
குமுளி: சபரிமலை அடிவாரம் பம்பை நதிக்கரையில் சபரிமலைக்கான கிளை அஞ்சல் நிலையம் செயல்பட்டு வருகிறது. வனப் பகுதியான இங்கு கோயில் திறக்கப்படும் நாட்களில் மட்டுமே இந்த அஞ்சல் நிலையம் செயல்படும். இதற்கென பிரத்யேக அஞ்சல் குறியீட்டு எண் (689 713) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மண்டல பூஜை வழிபாடு தொடங்கியுள்ள நிலையில் இந்த அஞ்சலகமும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் அஞ்சல் அட்டை, உள்நாட்டு தபால், அஞ்சல் உறை போன்றவற்றில் ஐயப்ப சுவாமி உருவம் ‘போஸ்ட் மார்க்’ எனும் முத்திரை குத்தப்பட்டு வழங்கப்படுகிறது.
அதில், யோகநிலையில் அமர்ந்த ஐயப்பனின் உருவம் 18 படிகளுடன் உள்ளது. மண்டல, மகர வழிபாட்டுக் காலங்களில்தான் இவற்றைப் பெற முடியும் என்பதால், பக்தர்கள் பலரும் தபாலை ஆர்வத்துடன் வாங்கி, உறவினர்களுக்கு அனுப்புகின்றனர்.
இதுகுறித்து நிலைய அஞ்சல் அதிகாரி ஷிபு வி.நாயர் கூறியதாவது: இந்தியாவில் குடியரசுத் தலைவர் மற்றும் சபரிமலை ஐயப்பனுக்கு மட்டுமே பிரத்யேக அஞ்சல் குறியீட்டு எண் வழங்கப்பட்டுள்ளது.
பணப் பரிவர்த்தனைகள், பிரசாத பார்சல் புக்கிங், மொபைல் ரீசார்ஜ் உள்ளிட்ட வசதியும் இங்கு உள்ளது. கோயில் நடை திறக்கப்பட்டதில் இருந்து சுமார் ஆறாயிரம் தபால் அட்டைகள் விற்பனையாகியுள்ளன. மகர விளக்கு வழிபாடு முடியும் வரை இந்த அஞ்சலகம் செயல்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.