

விபத்தில் காயமடைந்தவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் வி.கே.ராஜீவ், ஆட்சியர் சிவகுரு பிரபாகரன். உள்படம்: மகேஷ்குமார்
ராமநாதபுரம்: தேவிப்பட்டினம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய டிராக்டரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்ற தலைமைக் காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய் நிவாரணமாக ரூ.30 லட்சம் அறிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் அருகே தேர்போகி கிராமத்தில் சட்டவிரோதமாக சவுடு மண் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், நேற்று அதிகாலை சார்பு ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு சட்டவிரோதமாக மண் அள்ள பயன்படுத்தப்பட்ட 3 டிராக்டர்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை கைப்பற்றினர். திருட்டு மண் அள்ளிய தேர்போகி, பழனிவலசை கிராமங்களைச் சேர்ந்த கார்த்திக் ராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
அதிகாலை 4 மணியளவில் பறிமுதல் செய்த டிராக்டரை தேவிப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர் மகேஷ்குமார் ஓட்டி வந்தார். அப்போது, நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்து, டிராக்டரின் பின்பகுதியில் மோதியது. இதில் டிராக்டரும், பேருந்தும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த தலைமைக் காவலர் மகேஷ்குமார் (41) அதே இடத்திலேயே உயிரிழந்தார். அரசு பேருந்து ஓட்டுநர் பட்டுராஜா, நடத்துநர் கிருஷ்ணா மற்றும் பயணிகள் 11 பேர் காயமடைந்தனர். தேவிப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மகேஷ் குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே மகேஷ்குமாரின் கண்களை குடும்பத்தினர் தானமாக வழங்கினர். பின்னர், அவரது உடலுக்கு அமைச்சர் வி.கே.ராஜீவ், டிஐஜி மணிவண்ணன், ஆட்சியர் சிவகுரு பிரபாகரன், எஸ்பி ஜி.சந்தீஷ் ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர், 21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.