

அக்ரி கிருஷ்ணமூர்த்தி
திருவண்ணாமலை: அதிமுகவை பற்றி குறை கூறமுன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எந்த அருகதையும் இல்லை என அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமை முதல் தொண்டர் வரை யாரும் திமுகவுக்கு ஆதரவாக செயல்படவில்லை என்பதை சி.வி.சண்முகம் உணர வேண்டும். தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் இதே கருத்தை கூறி வருகிறார். அவர் நாவடக்கத்தோடு பேச வேண்டும்.
ஆணவத்தால் குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்கும் வேலையை அவர் நடத்தி வருகிறார். உங்களது தவறை திருத்தவில்லையென்றால் அதிமுக உண்மையான தொண்டர்கள் கொதித்து எழுவார்கள். பாமக உள்ளிட்ட பல்வேறு கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றது. சி.வி.சண்முகம் தான் விழுப்புரம் மாவட்டத்தில் தட்டுத்தடுமாறி வெற்றி பெற்றுள்ளார் என்பதுதான் உண்மை.
வடமாவட்டங்களில் வலுவான கட்சியான பாமகவை பழனிசாமி தான் கூட்டணியில் இணைத்தார். விழுப்புரம் சட்டப்பேரவை தொகுதியில் சி.வி சண்முகம் மட்டுமே வெற்றி பெற்றார். அவர் பரிந்துரை செய்தவர்களை தான் பொதுசெயலாளர் வேட்பாளர்களாக அறிவித்தார். அவர்கள் யாரும் வெற்றி பெறவில்லை.
ஆகவே சி.வி.சண்முகத்துக்கு அதிமுகவை பற்றி குறைகூற எந்த அருகதையும் இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக தோல்விக்கு சி.வி.சண்முகமே காரணம். கழக அமைப்பு செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் பதவி ஆகியவை பொதுச்செயலாளர் பழனிசாமி போட்ட பிச்சைதான். சி.வி.சண்முகம் நாவடக்கத்தோடு பேச வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளில் நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்ட பின்னர்தான் அதிமுக வின் செயற்குழு கூட்டமோ அல்லது பொதுக் குழு கூட்டமோ நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த செய்தியாளர்சந்திப்பின்போது, எம்எல்ஏக்கள் எஸ்.ராமச்சந்திரன், வேலு, மாநில அம்மா பேரவை துணை செயலாளர் இ.என்.நாராயணன் உள்பட பலர் உடனிருந்தனர்.