

சென்னை: பல மாவட்டங்களில் குவாரிகள் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளதால் ஜல்லி, எம்-சாண்ட் உற்பத்தி குறைந்து விலை அதிகரித்துள்ளது என சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் இன்று நீர்வளம், ஊரக வளர்ச்சி, சுற்றுலா துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “தவெக ஆட்சி அமைந்த பிறகு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று, குவாரிகளை ஆய்வு செய்தார். முறைகேடுகள் கண்டறியப்பட்டு, குவாரிகள் சீல் வைக்கப்பட்டன.
அமைச்சர் ஆய்வு செய்ததிலும், முறைகேடுகளை கண்டுபிடித்ததிலும் தவறு இல்லை. எனினும், பல்வேறு மாவட்டங்களிலும் பல குவாரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், ஜல்லி, எம்-சாண்ட் உற்பத்தி குறைந்துவிட்டது. நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித் துறை சார்பில் பாலங்கள், வீடுகள் கட்டுவதற்கு ஜல்லி, எம்-சாண்ட் அதிகம் தேவையாக உள்ளது.
தேவை அதிகம் இருப்பதால் விலை அதிகரித்துள்ளது. அவற்றின் உற்பத்தியை அதிகரித்து, விலையைக் குறைக்க அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?” என்றார்.
இதற்கு பதில் அளித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு கூறுகையில், “கனிம வளங்கள் அதிக அளவில் பக்கத்து மாநிலத்துக்குச் சென்று கொண்டிருந்தது. நமது மக்களுக்கு அவை கிடைக்க வேண்டும் என்பதால், அண்டை மாநிலத்துக்குச் செல்வதற்கு முதல்முறையாக முதல்வர் விஜய் தடை போட்டார். ஜல்லி, எம்-சாண்ட் உற்பத்தியை அதிகரித்து, விலையைக் குறைப்பதற்கான திட்டங்கள் குறித்து மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்படும்” என்றார்.