

சென்னை: தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில்கூட மறுவாக்குப்பதிவுக்கு பரிந்துரை செய்யப்படவில்லை. வாக்கு எண்ணும் மையங்களில் தினமும் மாவட்ட தேர்தல் அதிகாரி (டிஇஓ), தேர்தல் நடத்தும் அதிகாரி (ஆர்ஓ) ஆகியோர் ஆய்வு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.23-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில் 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்த பின்னர், 62 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அதைத்தொடர்ந்து, வாக்குச்சாவடிகளில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால் அதைக் கண்டறிந்து, தேவைப்பட்டால் மறுவாக்குப்பதிவுக்குப் பரிந்துரைக்கவும், படிவம் 17ஏ (வாக்காளர் வருகைப் பதிவேடு) மற்றும் வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தப்பட்ட பிற தேர்தல் ஆவணங்களை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய சரிபார்ப்பு குறித்த ஒருங்கிணைந்த அறிவுறுத்தல்களை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற அனைத்து தொகுதிகளிலும், ஏப்.24-ம் தேதி பொதுப் பார்வையாளர்கள் மற்றும் 1,825 வேட்பாளர்கள் அல்லது அவர்களது பிரதிநிதிகள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஆவணங்கள் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. வாக்குப்பதிவு நடைபெற்ற 75,064 வாக்குச்சாவடிகளில், சரிபார்ப்புக்கு பிறகு எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு இரட்டைப் பூட்டு முறை, 24 மணி நேரமும் சுழற்சி முறையில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அறைகளுக்கு ஒரு நாளில் இருமுறை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேரில் சென்று ஏற்பாடுகளைச் சரிபார்க்க வேண்டும்.
அதேபோல், தலைமையகத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் தினமும் ஒருமுறையும், தலைமையகத்துக்கு வெளியே உள்ள அறைகளுக்கு 3 அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறையும் நேரில் சென்று ஆய்வுசெய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.