

செங்கல்பட்டு: டெங்கு காய்ச்சல் பாதிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 4.8 மடங்கு அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 98 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மழைக்காலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத் துறை புள்ளிவிவரங்களின்படி, இம்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பாதிப்பு உயர்ந்துள்ளது.
தாம்பரத்தில் அதிக பாதிப்பு: தாம்பரம் மாநகராட்சியில் ஆகஸ்ட் மாதத்தில் 35 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பரில் 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 7 மடங்குக்கும் அதிகமான உயர்வாகும். மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அதிகபட்சமாக 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் பாதிப்பு 53-ல் இருந்து 172 ஆக உயர்ந்துள்ளது. புனித தோமையார் மலை வட்டாரப் பகுதியில் 69 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகராட்சிகளில் பாதிப்பு 7-ல் இருந்து 40 ஆகவும், பேரூராட்சிகளில் 3-ல் இருந்து 10 ஆகவும் உயர்ந்துள்ளது. கூடுவாஞ்சேரி நகராட்சியில் மட்டும் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மழையால் வீடுகள், காலி மனைகள், கட்டுமானப் பகுதிகள், பள்ளி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் தண்ணீர் தேங்கினால், கொசுப்புழு உற்பத்திக்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். இதையடுத்து உள்ளாட்சிகள் சார்பில் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, தேங்கிய மண் மற்றும் குப்பை போன்றவை அகற்றப்பட்டுள்ளன. பள்ளிகளில் டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் வீடு வீடாகச் சென்று கொசுப்புழு உற்பத்தி இடங்களைக் கண்டறிந்து அழித்தல், தேவையான இடங்களில் புகை மருந்து அடித்தல், காய்ச்சல் பாதிப்பைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளைத் தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மழைக்காலத்தில் குடிநீர் ஆதாரங்கள் மாசடையும் வாய்ப்புள்ளதால், முறையான குளோரினேஷன் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெங்கு மட்டுமின்றி, டைபாய்டு உள்ளிட்ட நீர்வழி நோய்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விழிப்புணர்வு அவசியம்: இதுகுறித்து சமூக ஆர்வலர் இளங்கோ கூறியதாவது: மழைக்காலங்களில் சில பகுதிகளில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதால் கொசுத் தொல்லை அதிகரிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காய்ச்சல் ஏற்பட்டால் சுயமாக மருந்து, மாத்திரைகள் உட்கொள்வதைத் தவிர்த்து, மருத்துவரை அணுக வேண்டும். காய்ச்சலுக்கான காரணத்தை மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை பெறுவது அவசியம். இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் கொசுப்புழு ஒழிப்பு, தூய்மைப் பணி மற்றும் காய்ச்சல் கண்காணிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வதுடன், பொதுமக்களும் தங்கள் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சி அமைப்புகளும் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.