

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.
அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சங்க நிர்வாகிகளை வீட்டுக் காவலில் வைத்தனர். தடைகளை தாண்டி சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடிய ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டனர். பின்னர், டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளிகல்வித் துறைச் செயலர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர்களது கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறிய நிலையில், 3 நாட்களாகியும் போராட்டக் குழுவிடம் அரசுத் தரப்பில் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. இதனால் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக டிட்டோ-ஜாக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி. அதை நிறைவேற்ற வேண்டும் என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
அதேபோல, சம வேலைக்கு சம ஊதியம், தொடக்கக் கல்வியில் உள்ள 30 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, சங்க நிர்வாகிகளை அழைத்துப்பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.