

தவெக மகளிரணியினர்
மதுரை: தவெக மாவட்டச் செயலாளர் மீது அவதூறு பரப்பிய பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அக்கட்சியின் மகளிரணியின் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை வடக்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் கல்லாணை விஜயன்பன். இவர் கட்சியில் பதவி வழங்க கட்சியினரிடம் பணம் கேட்பதாகவும், பெண் உறுப்பினர்களை மதிக்காமல் கேலி பேசுவதாகவும், அவருக்கு எதிராக புகார் எழுந்தது. இதைக் கண்டித்து மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட விசாலாட்சிபுரம் காளாங்கரை பகுதி தவெகவை சேர்ந்த சக்தி என்ற சத்யா உள்ளிட்ட தொண்டர்கள் விஜயன்பனுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில் தவெக வழக்கறிஞர் பிரிவு மாநில இணை அமைப்பாளர் விக்னேஷ் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் என 300-க்கும் மேற்பட்டோர் சத்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களை, போலீஸார் மெயின் நுழைவு வாயிலில் தடுத்தனர். குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே உள்ளே சென்று ஆணையர் அலுவலகத்தில் தனித்தனியே புகார் அளிக்க அனுமதிக்கப் பட்டனர்.
அதில் கூறியிருப்பதாவது: ”மதுரை 15-வது வார்டு காலாங்கரை பகுதி சத்யா என்பவர் பொதுமக்களிடம் பண மோசடி செய்தவர். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டு உள்ளது. அவரை கட்சியில் சேர்க்காமல் இருந்தோம். ஏற்கெனவே விஜய் மக்கள் இயக்க பெயரைச் சொல்லி பண மோசடியில் ஈடுபட்டதால் நீக்கப்பட்ட நிர்வாகியின் தூண்டுதலில் மாவட்ட செயலாளர் கல்லாணை சாதி பார்த்து பொறுப்பு வழங்குவதாக சத்யா பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். மாவட்ட செயலாளருக்கும், கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படும் சத்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
மகளிரணி நிர்வாகிகள் கூறுகையில், கல்லாணை மீது குற்றம் சாட்டிய சத்யா மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளன. இதனால் அவரை கட்சியில் சேர்க்கவில்லை. இதை திசை திருப்ப வேறொருவரின் பின்னணியில் செயல்படுகிறார். காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லாணை பெண்களுடன் கண்ணியமாக நடந்து கொள்பவர். அவர் மீது வேண்டும் என்று அவதூறு பரப்புகின்றனர்” என்றனர்.