

கெனிஷா
சென்னை: நடிகர் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு வரும் டிச.3 அன்று நேரில் ஆஜராக வேண்டுமென பாடகி கெனிஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் ரவி மோகன் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ரவி மோகனையும், பாடகி கெனிஷாவையும் தொடர்புபடுத்தி சர்ச்சைகள் எழுந்தது.
ஆர்த்தி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பொதுவெளியில் இருவரும் தங்களது தனிப்பட்ட குடும்ப பிரச்னை தொடர்பாக எந்த கருத்துகளையும் பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களை சந்தித்து பேட்டியளித்த நிலையில், ஆர்த்தி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அதையடுத்து ரவி மோகன் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி பொது அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில், பாடகி கெனிஷா தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகளை நீக்கக் கோரியும், இதற்காக தனக்கு ரூ. 1 கோடியே 1 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி கெனிஷாவுக்கு எதிராக ஆர்த்தி தொடர்ந்த அவதூறு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.டி. மரியா க்ளேட் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அதன்படி இந்த வழக்கு சாட்சிகள் பதிவுக்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் பாடகி கெனிஷா வரும் டிச.3 அன்று நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே நடிகர் ரவி மோகன் தனது குழந்தைகளைப் பார்க்க குடும்ப நல நீதிமன்றம் அனுமதி வழங்கி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஆர்த்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.