

சென்னை: சென்னையில் இருந்து கோவை, மதுரை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயண நேரம் 40 நிமிடம் வரை மிச்சமாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1-ல் அமலாக உள்ள நிலையில், முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் விரைவு ரயில்களின் பயண நேரம் 40 நிமிடங்கள் வரை குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு ரயில்வேயில் விரைவு, பாசஞ்சர் ரயில்களுக்கான அட்டவணை ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்டில் வெளியிடப்பட்டு வந்தது. இந்த நடைமுறையில் கடந்த ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது.
அதன்படி, டிசம்பர் இறுதியில் அட்டவணை வெளியிடப்பட்டு, 2025 ஜன-1-ம் தேதி அமலுக்கு வந்தது. அந்த வகையில், வரும் 2026-ம் ஆண்டுக்கான தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்களின் சேவையை மேம்படுத்துவதிலும், தாமதம் இன்றி இயக்குவதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. பாதைகள் மேம்படுத்தப்படுகின்றன. நவீன சிக்னல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அதுபோல, பிரதான வழித்தடங்களில் மின்மயமாக்கல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இதனால், நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்களில் மின்சார இன்ஜினை கழற்றி, டீசல் இன்ஜின் மாற்றும் வேலையும் இனி இருக்காது.
அடுத்த ஆண்டுக்கான புதிய கால அட்டவணை இம்மாத இறுதியில் வெளியிட்டு, ஜன.1-ல் அமல்படுத்தப்படும். சென்னையில் இருந்து கோவை, மதுரை, கன்னியாகுமரி உட்பட பல்வேறு வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை கணிசமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பயண நேரம் 40 நிமிடம் வரை மிச்சமாகும். இதற்கான ரயில்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று அவர்கள் கூறினர்.