

மதுரை: ‘திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது மாநில அரசின் கடமை. மலை உச்சியில் உள்ள தீபத்தூணை சமணர் தூணாக மாற்ற அரசு முயற்சிக்கிறது’ என மனுதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கின் மேல்முறையீடு மனுக்கள் விசாரணை நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வில் 4-வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் ராம ரவிகுமார், அரசபாண்டி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் வாதிடுகையில், “தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. தனி நீதிபதியின் உத்தரவை நிறைவேற்ற பொது அமைதி சீர்கேடும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் கூறுவது நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுவதை தாமதிப்பதற்கான காரணமாகும்.
பொது அமைதி சீர்கெடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இது சாக்குப்போக்கு காரணம். பொது அமைதி என்பது ஒட்டுமொத்த மாநிலம் சார்ந்தது. சட்ட அமைப்பான நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றாமல் அரசு அடிப்படை கடமையை மீறியுள்ளது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதற்கு முன்பு 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. காவலர்கள் குவிக்கப்பட்டனர். அடிப்படை உரிமை அனைவருக்கும் பொதுவானது.
இரு மதத்தினர் இடையே பிரச்சினை வரும் என்பதற்காக அடிப்படை உரிமையை நிறைவேற்ற அரசு தயக்கம் காட்டக் கூடாது. மத விவகாரங்களில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம். சபரிமலை வழக்கில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேல்முறையீட்டு மனுதாரர்கள் வாதங்களை மட்டும்தான் வைக்கின்றனர். ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.
தர்காவிலிருந்து 15 மீட்டர் தொலைவில் கோயிலுக்கு சொந்தமான எந்தப் பகுதியிலும் கோயில் நிர்வாகம் தீபம் ஏற்றலாம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இருப்பினும் வேண்டும் என்றே திட்டமிட்டு இரு மதத்தினருக்கு இடையே பிரச்சினை உள்ளது போல் மேல்முறையீட்டு மனுதாரர்கள் வாதிட்டு நீதிமன்றத்தை திசை திருப்பி வருகின்றனர்.
பாரம்பரியமான இடத்தில் தான் தீபம் ஏற்ற வேண்டும் . தற்போது ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றக் கூடாது என மனுதாரர்கள் கோரியுள்ளனர். வழக்கின் தீர்ப்பில் தனி நீதிபதி தனது சித்தாந்தத்தை குறிப்பிட்டுள்ளார் என மேல்முறையீட்டு மனுதாரர்கள் கூறுவது ஏற்படையது அல்ல.
தீபம் ஏற்றுவதற்கு முழு அதிகாரம் கோயிலுக்கு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்ய வேண்டும் என நீதிபதி கனகராஜ் தனது உத்தரவில் கூறியுள்ளார். கோயில் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்றார்.
அப்போது நீதிபதிகள், “மாற்று இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் எனக் கூறும்போது மனுதாரரின் மனு நிலைக்கதக்கதா என்ற கேள்வி எழுகிறது. அது குறித்து வாதங்களை முன்வையுங்கள்” என்றனர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், “மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டி மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டதும் நீதிமன்றத்தை நாடினோம்.
1996-ம் ஆண்டு உத்தரவின்படி, தர்காவில் இருந்து 15 மீட்டர் தூரத்தில் தீபம் ஏற்றலாம். அந்த உத்தரவில் எந்த குழப்பமும் இல்லை. திருப்பரங்குன்றத்தில் இரண்டு மலைகள் கிடையாது. இரண்டு மலை உச்சிகள் தான் உள்ளன. மலையில் ஒரு குறிப்பிட்ட பகுதி கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம் என முடிவான பிறகு அந்த இடத்தில் தீபம் ஏற்றக்கூடாது என தர்கா தரப்பினர் கூறுவதற்கு எந்த உரிமையும் இல்லை.
தர்கா தரப்பினர் மலை முழுவதும் சிக்கந்தர் மலை என உரிமை கோரி வருகின்றனர். மலையில் ஆடு, கோழி பலியிட அனுமதிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். தற்போது நெல்லித்தோப்பில் உள்ள படிக்கட்டுகள் வழியாக தீபம் ஏற்ற செல்வதற்கு விடமாட்டோம் என வாதிடுகின்றனர். கோயிலின் கீழிலிருந்து தான் படிக்கட்டுகள் மேலே செல்கிறது. அந்த வழியாக யாரையும் மலைக்கு மேல் அனுமதிக்கமாட்டோம் என நாங்கள் சொல்ல முடியுமா?
நொல்லித்தோப்பு படிக்கட்டுகளை பயன்படுத்த எந்த தடையும் இல்லை. ஏற்கெனவே உள்ள பழக்க வழக்கத்தை தான் கடைபிடிக்கவே கோருகிறோம். ஆனால், அரசு அளவைக் கல், சமணர் தூண் என்று கூறுகிறது.
தர்கா தரப்பில் தூண் தங்களுக்கு சொந்தம் என்று கூறுகின்றனர். மலை உச்சியில் உள்ள தீபத்தூணை அரசு சமணர் தூணாக மாற்ற முயற்சிக்கிறது. வக்பு வாரியத்தின் பணி தர்கா சொத்துகளை பாதுகாப்பது மற்றும் கண்காணிப்பதுதான். ஒரு பிரச்சினையில் மற்றொரு தரப்பினரிடம் சமரசம் பேசுவதற்கு அதிகாரம் இல்லை.
தொல்லியல் துறைக்கு சொந்தமான பகுதிகளில் எந்தவித மாற்றமும், வண்ணங்களையும் அடிக்கக் கூடாது. பழமையான நினைவு சின்னங்கள் உள்ள இடங்களில் தொல்லியல் துறை சட்டத்தின் படி ஆடு, கோழி பலியிட தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
தொடர்ந்து நீதிபதிகள், “மலை உச்சியில் உள்ள தூணில் தீபங்கள் ஏற்றிய சான்றுகள் உள்ளதா? மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை விசாரணைக்கு உகந்ததா என்பதை முதலில் தெளிவுபடுத்துங்கள்” என்றனர்.
அதற்கு மனுதாரர் தரப்பில், “நீதிபதி கனகராஜின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றுதான் மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார்” எனக் கூறப்பட்டது. பின்னர் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.