

சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த திட்டத்துக்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை திருப்பிப் தருவது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என்று அமைச்சர் ஏ.ராஜ்மோகன் கூறினார்.
தமிழ் தென்றல் திருவிக-வின் 143-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் திருவிக படத்துக்கு பள்ளிக் கல்வி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பரந்தூர் விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறித்தது என்பது தாயையும், குழந்தையையும் பிரித்ததற்கு சமம். தமிழகத்துக்கு விவசாயமும் வேண்டும், விமான நிலையமும் வேண்டும்.
இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்து கலந்தாலோசிக்க வேண்டிது அவசியம். பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ஒருசில விவசாயிகளுக்கு கொடுத்துள்ளனர். அதேநேரத்தில் சிலருக்கு வழங்கவில்லை.
இந்த உலகத்தில் எல்லா பெரிய வன்முறைகளும் வளர்ச்சி என்ற வார்த்தையின் மூலம் தான் தொடங்கியிருக்கும். எனவே, ஒரு நிலையான வளர்ச்சி தான் வேண்டும் என்பதற்காக பரந்தூர் விவகாரத்தில் சொன்னதை செய்தார் முதல்வர் விஜய்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் தாண்டிய தொல்லியல் பொக்கிஷம் கம்பன் கால்வாய் பரந்தூரில் தான் இருக்கிறது. அங்கிருந்து தான் கடைமடை ஏரிகளுக்கு தண்ணீர் வரும். அப்படி வந்தால் தான் பல்லாயிரக்கணக்கான பறவைகள் வந்து இனப்பெருக்கம் செய்யும். இது தொல்லியல் தொடர்புடையது மட்டுமல்ல, சுற்றுச்சூழல் சங்கிலியும் ஆகும்.
பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லி, ஆயிரம் நாட்களைக் கடந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் திருப்பித் தரப்படுமா என்பது குறித்து சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்துதான் கூற முடியும்.
விவசாயிகளுக்கு சாதகமாகவே அரசின் செயல்பாடுகள் இருக்கும். எதையும் அவசரப்பட்டு சொல்லி விட முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. எனவே, அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும்.
உலக தமிழ் மாநாட்டுக்கு குழு
உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் எந்தவிதமான தொய்வும் இல்லை. இளம் தலைமுறையினருக்கு தமிழ் உணர்வு இருக்கிறது.
ஆனால் அதை தமிழிலேயே வெளிப்படுத்துவதற்கான வெளிப்பாடு இல்லை. அவ்வளவுதான். அவர்களையும் அரவணைக்கும் சூழல் இருப்பதால், உலகத் தமிழ் மாநாடு நடத்துவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
அந்த வகையில் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது தொடர்பாக முதல்வர் முடிவெடுத்துள்ளார். அதற்காக குழு அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.