

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணி காரணமாக, விரைவு ரயில்களை மீண்டும் தாம்பரத்தில் இருந்து இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, மறுசீரமைப்பு பணி ரூ.734.91 கோடியில் கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக, எழும்பூர் ரயில் நிலையத்தின் முதல் 5 நடை மேடைகளை அகலப்படுத்தி நவீனப்படுத்தும் பணிகளுக்காக, தாம்பரம் நிலையத்துக்கு விரைவு ரயில்கள் மாற்றம் கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு செப்டம்பர், டிசம்பரில் அடுத்தடுத்த கட்டங்களாக மற்ற விரைவு ரயில்களும் தாம்பரம் முனையத்துக்கு மாற்றப்பட்டன.
இதன்பிறகு, ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரை இணைக்கும் வகையில் பிரம்மாண்ட நடைமேம்பாலம் அமைக்க முதல்கட்ட பணிகள் நடப்பாண்டில் பிப்ரவரியில் தொடங்கியது.
இதையடுத்து, உழவன், அனந்தபுரி, ராமேஸ்வரம் போன்ற சில முக்கிய விரைவு ரயில்கள் பிப்.3-ம் தேதி முதல் ஏப்.4-ம் தேதி வரை தாம்பரம் நிலையத்துக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டு அங்கிருந்து இயக்கப்பட்டன.
இதுதவிர, புறநகர் மின்சார ரயில்களின் சேவை பிப்.20 முதல் ஏப்.3 வரை 43 நாட்களுக்கு தற்காலிக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன்பிறகு, முக்கிய பணிகள் முடிந்த பிறகு, எழும்பூர் நிலையத்தில் இருந்து விரைவு ரயில்களின் இயக்கம் சீரானது.
இந்நிலையில், 3-ம் கட்டமாக, இரும்பு நடைமேம்பாலப் பணிகளுக்காக, சில விரைவு ரயில்கள் தாம்பரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளன.
நடைமேம்பாலம் அமைக்க, 500 டன் எடைக்கும் அதிகமான கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு, இரும்பு கர்டர்கள் நிறுவப்படவுள்ளன. இந்த பாலம் 18 மீட்டர் அகலத்துடனும், 120 மீட்டர் நீளத்துடனும் அமையவுள்ளது.
தற்போது, காந்தி இர்வின் சாலை பகுதியில் உள்ள நடைமேடை 1 முதல் 5 வரையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை வரையில் இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
இதனால், எழும்பூரில் இருந்து இயக்கப்படும் விரைவு ரயில்கள் மீண்டும் தாம்பரத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘நடைமேம்பாலம் அமைக்கும் பணியால், சில விரைவு ரயில்களை தாம்பரத்துக்கு மாற்றுவது தொடர்பாக, தெற்கு ரயில்வே தலைமையகத்துக்கு பரிந்துரை செய்துள்ளோம்.அனுமதி கிடைத்த பிறகு மாற்றம் செய்யப்படும்.
இந்த மாற்றம் விரைவில் அமலுக்கு வரும். பயணிகளுக்கு எவ்வித தொந்தரவு இல்லாமல், ரயில் சேவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில்கள் 5, 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.