

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் 2 பெண்கள் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்தது. உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 19 பேரின் உடல்கள் நேற்று முன்தினம் இரவு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டன.
4 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சேர்வைக்காரன் பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), திருத்தங்கல் பஞ்சவர்ணம் (56) ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆனது.
சேர்வைக்காரன்பட்டியில் ஒரே ஊரில் ஓர் ஆண் உட்பட 19 பேர் உயிரிழந்துள்ளதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. மேலும், உயிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆலை உரிமையாளரை கைதுசெய்ய வேண்டும்.
ஆலை நிர்வாகம் சார்பில் வழக்கமாக வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை ரூ.5.50 லட்சத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கோரி உயிரிழந்தோரின் குடும்பத்தினர் உடல்களை வாங்க மறுத்து நேற்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி இழப்பீடாக ரூ.4 லட்சத்தை தற்போது வழங்குவதாக தெரிவித்தார். ஆனால், இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதன்தொடர்ச்சியாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டின் அருகில் போலீஸாரின் தடையை மீறி மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் எஸ்.பி. நாதா பேச்சு நடத்தினர் ஆலை உரிமையாளரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது தரப்படும் இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ளுமாறும் கூறினார்.
இதை ஏற்று கலைந்துசென்றனர். விருதுநகர் ஆட்சியர் சுகபுத்ரா செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயமடைந்தோருக்கு ரூ.2 லட்சமும், லேசான காயம் அடைந்தோருக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும்” என்றார்.