திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகார்: திமுக நிர்வாகி ரூ.50 லட்சத்துடன் கைது

காரைக்குடியில் பறிமுதல் செய்த பணத்தை பறித்து சென்றவர்களுக்கு வலை
திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகார்: திமுக நிர்வாகி ரூ.50 லட்சத்துடன் கைது
Updated on
2 min read

மதுரை/ காரைக்குடி: ​திருப்​பரங்​குன்​றத்​தில் வாக்​காளர்​களுக்கு பணம் விநி​யோகித்த புகாரில் திமுக நிர்​வாகி கைது செய்​யப்​பட்​டார். அவரிட​மிருந்து ரூ.50 லட்​சம் பறி​முதல் செய்​யப்​பட்​டது. இதே​போல் காரைக்​குடியில் அதிகாரிகளால் பறி​முதல் செய்யப்பட்ட பணத்தை பறித்துச்சென்​ற கும்பலை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

சட்​டப்​பேர​வைத் தேர்​தல் பிரச்​சா​ரம் இன்​றுடன் முடிவ​தா​லும், வாக்​குப்​ப​திவுக்கு 2 நாட்​களே இருப்​ப​தா​லும் பல இடங்​களில் வாக்​காளர்​களுக்கு கட்​சி​யினர் பணம் வழங்கி வரு​வ​தாக புகார் எழுந்​துள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் பாம்​பன் நகர் பகு​தி​யைச் சேர்ந்தவர் திமுக தொண்​டரணி அமைப்​பாளர் நாகலிங்​கம். இவர் கோடாங்​கித் தோப்பு தெரு​வில் நேற்று முன்​தினம் இரவு 9 மணி​யளவில் வாக்காளர்​களுக்கு பணம் விநி​யோகிப்​ப​தாக பறக்​கும் படை​யினருக்கு தகவல் கிடைத்​தது. உடனடி​யாக அப்​பகு​திக்​குச் சென்ற பறக்​கும் படை​யினர், நாகலிங்​கத்தை பிடித்து ரூ.50 லட்​சத்தை பறி​முதல் செய்​தனர்.

பின்​னர், அவரை​யும் பறி​முதல் செய்​யப்​பட்ட பணத்​தை​யும் போலீ​ஸாரிடம் ஒப்​படைத்​தனர். நாகலிங்​கம் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​து, அவரை கைது செய்​தனர். கைப்​பற்​றப்​பட்ட பணம் கரு​வூலத்​தில் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இதே​போல் காரைக்​குடி​யில் கார்த்தி சிதம்​பரம் எம்​.பி. அலு​வல​கத்​தில் வாக்​காளர்​களுக்​குக் கொடுப்​ப​தற்​காக பணம் வைத்​திருப்​ப​தாக தேர்​தல் அதி​காரி​களுக்கு புகார் வந்​தது. இதையடுத்​து, வட்​டாட்​சி​யர் தர்​மலிங்​கம் தலை​மையி​லான தேர்​தல் கண்​காணிப்​புக் குழு​வினர் அங்குசென்​றனர்.

தொடர்ந்து அலுவலகத்தில் அவர்​கள் சோதனை​யிட்​ட​போது, கட்​டுக்​கட்​டாக பணம் இருந்​தது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை அதி​காரி​கள் பறி​முதல் செய்​து, எடுத்​துச் ​செல்ல முயன்​றனர். அப்​போது அங்​கிருந்த பழனியப்​பன் உள்​ளிட்ட காங்​கிரஸ் கட்​சியினர் பணத்தை முறை​யாக எண்​ணி, எவ்​வளவு எடுத்​துச்​செல்​கிறோம் என்று தெரிவிக்க வேண்​டுமெனத் கோரினர்.

இதைத் தொடர்ந்து காரில் வைத்து அதி​காரி​கள் பணத்தை எண்​ணினர். அதில் ரூ.13.40 லட்​சம் இருந்​தது. அப்​போது அங்​கிருந்த காங்​கிரஸார் இது எம்​.பி. அலு​வல​கத்​தில் பல்​வேறு செல​வு​களுக்​காக வைத்​திருந்த பணம், அதை எப்​படி எடுத்​துச் செல்​லலாம் என்று வாக்​கு​வாதம் செய்​தனர்.

அதேசம​யத்​தில் அதி​காரி​களிட​மிருந்த பணத்​தைப் பறித்து கொண்டு இரு​வர் இருசக்கர வாக​னத்​தில் தப்​பிச் சென்​றனர். மேலும், அவர்​களை விரட்​டிப் பிடிக்க அதி​காரி​கள் காரை எடுக்க முயன்​ற​போது தப்பி ஓடிய​வர்​கள் கார் சாவியை​யும் எடுத்​துச் சென்​றது தெரிய​வந்​தது.

இதனால் அதி​காரி​கள் செய்​வதறி​யாமல் தவித்​தனர். தவலறிந்து வந்த காரைக்​குடி உதவி காவல் கண்​காணிப்​பாளர் ஆஷிஷ்புனி​யா, வட்​டாட்​சி​யர் ராஜா ஆகியோர் விசா​ரணை நடத்​தினர்.

தொடர்ந்து வட்​டாட்​சி​யரின் புகாரின்​பேரில், காரைக்​குடி வடக்கு போலீ​ஸார் வழக்​குப் பதிந்​து, அதி​காரி​களிடம் வாக்​கு​வாதம் செய்த பழனியப்​பனை பிடித்து விசா​ரித்தனர்.

தப்​பியோடிய​வர்​களை​யும் போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர். இதனிடையே மாவட்ட எஸ்பி சிவபிர​சாத் விசா​ரணை செய்​தார். மேலும் அவர் கூறுகை​யில், தேர்​தல் அதி​காரி​கள் வாகன கேம​ரா​வில் பதி​வான காட்சி அடிப்​படை​யில் பணத்​தைப் பறித்​துச்​சென்ற நபர்​கள் விரை​வில் கைது செய்​யப்​படு​வார்கள் என்று தெரிவித்​தார்.

அரூர் ரூ.22 லட்சம்

இந்​நிலை​யில் தரு​மபுரி மாவட்​டம் அரூர் சட்​டப்​பேர​வைத் தொகு​திக்கு உட்​பட்ட அரூர் அம்​பேத்​கர்நகர் அருகே நேற்று முன்​தினம் நள்​ளிர​வில் பறக்​கும் படை​யினர் ரோந்து சென்றனர். அப்போது அவர்களைக் கண்டு ஓட்​டம் பிடித்த 20 பேர் கொண்ட கும்​பல்விட்​டுச் சென்ற இருசக்கர வாக​னத்​தில் ரூ.22 லட்​சத்து 3 ஆயிரம் இருந்​தது.

இதை அதிகாரி​கள் பறி​முதல் செய்​தனர். இந்த பணம் வாக்​காளர்​களுக்கு கொடுப்ப​தற்​காக வைத்திருக்கலாம் என்ற சந்​தேகம் எழுந்​துள்​ளது. பணம் மற்றும் இருசக்கர வாக​னம் அரூர் கோட்​டாட்​சி​யர் செம்​மலை​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

திருப்பரங்குன்றத்தில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா புகார்: திமுக நிர்வாகி ரூ.50 லட்சத்துடன் கைது
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 21 ஏப்ரல் 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in