

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் சொத்துகள் விவரங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் டிச.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சி.சமயமூர்த்தி, அனைத்து துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் அசையும், அசையா சொத்துகள், கடன்கள் மற்றும் பிற பொறுப்புகள் குறித்த விவரங்களை ஆண்டுதோறும் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி அரசு ஊழியர்கள் 2025, டிச.31-ம் தேதியுடன் முடிந்த ஆண்டுக்கான தங்களின் சொத்துகள், கடன் விவரங்களை ஐஎஃப்ஆர்எம்எஸ் இணைய தளம் வாயிலாக அக்.31-க்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
ஊழியர்கள் கோரிக்கை: அதன்பின் வரும் ஒவ்வொரு ஆண்டுக்கான விவரங்களையும் அடுத்தடுத்த ஆண்டுகளில் மார்ச் 31-க்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சொத்து விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர்களின் அமைப்புகள் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தன.
அதையேற்று தற்போது கால அவகாசம் டிச.31 வரை 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் பணியாற்றும் அரசு ஊழியர்கள், நீட்டிக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் சொத்து, பொறுப்பு விவரங் களை தவறாமல் சமர்ப்பிக்க உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.