திருப்பரங்குன்றம் மலை |கோப்புப் படம்
மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் கல்லத்தி மரத்தில் தர்கா தரப்பில் கட்டப்பட்டிருந்த கொடியை கோயில் அதிகாரிகள் நேற்று முன்தினம் அகற்றினர்.
திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் அருகே கோயிலின் தல விருட்சமான கல்லத்தி மரம் உள்ளது. அங்குள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்தின்போது கல்லத்தி மரத்தில் பிறை கொடி கட்டப்பட்டது. இந்தக் கொடியை அகற்றக்கோரி இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கின் நீதிமன்ற அவமதிப்பு மனு, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, “கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தில் பிறை கொடி கட்டப்பட்டுள்ளது. அந்தக்கொடி ஏன் அகற்றப்படாமல் உள்ளது?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, கல்லத்தி மரத்தில் தர்கா கொடி கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த தர்கா கொடியை நேற்று முன்தினம் இரவு கோயில் அதிகாரிகள் அகற்றினர். இதற்கு இந்து மக்கள் கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், கல்லத்தி மரத்தில் கட்டப்பட்டிருந்த கொடியை அகற்றியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி தர்கா தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.