நவி மும்பை மாகராட்சியை கட்சி கைப்பற்றியதை அடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள்
மும்பை: இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளை பாஜக - சிவ சேனா கூட்டணி வசப்படுத்துகிறது.
மகாராஷ்டிரா தலைநகர் மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு நேற்று நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இன்னும் சில மாநகராட்சிகளில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாலை 6 மணி நிலவரப்படி, எந்தெந்த கட்சிகள் எந்தெந்த மாகராட்சிகளில் எத்தனை எத்தனை இடங்களில் வெற்றி பெற்றன என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.
மும்பை மாநகராட்சி: மும்பை மாநகராட்சியை பாஜக - சிவ சேனா கூட்டணி கைப்பற்றுகிறது. மொத்தமுள்ள 227 வார்டுகளில், பாஜக 85 வார்டுகளிலும், சிவ சேனா 27 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் இக்கூட்டணி 112 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 114 வார்டுகளின் வெற்றி தேவை எனும் நிலையில், சற்று குறைவான எண்ணிக்கையில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், வேறு சில கட்சிகளின் ஆதரவுடன் இக்கூட்டணி மேயர் வேட்பாளரை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கலாம்.
26 ஆண்டுகளாக ஒருங்கிணைந்த சிவ சேனாவின் கட்டுப்பாட்டில் மும்பை மாநகராட்சி இருந்து வந்தது. ஏக்நாத் ஷிண்டேவால் ஏற்பட்ட பிளவை அடுத்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவ சேனா வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.
அதேநேரத்தில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 72 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா(எம்என்எஸ்) 10 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 21 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு வார்டிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
நவி மும்பை மாகராட்சி: நவி மும்பையிலும் முடிவுகள் முழுமையாக வெளியாகி உள்ளன. இந்த மாநகராட்சியில் மொத்தமுள்ள 111 வார்டுகளில், பாஜக 66 வார்டுகளிலும், சிவ சேனா 42 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதன்மூலம், இக்கூட்டணி 108 வார்டுகளில் வெற்றி பெற்று ஏறக்குறைய மொத்தமாக மாநகராட்சியை தங்கள் வசப்படுத்தி உள்ளன. உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா 2 வார்டுகளிலும், எம்என்எஸ் ஒரு வார்டிடும் வெற்றி பெற்றள்ளன. காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
நாசிக் மாகராட்சி: மகாராஷ்டிராவின் மற்றொரு முக்கிய மாநகராட்சியான நாசிக்கிலும் பாஜக - சிவ சேனா கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 112 வார்டுகளில், 107 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பாஜக 67 வார்டுகளையும், சிவ சேனா 24 வார்டுகளையும் பெற்றுள்ளன. சிவ சேனா (உத்தவ் தாக்கரே) 8 வார்டுகளிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும், காங்கிரசும் தலா 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எம்என்எஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.
பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சி: பிம்ப்ரி சின்ச்வாத் மாநகராட்சியையும் பாஜக - சிவ சேனா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இங்கு மொத்தமுள்ள 128 வார்டுகளில், பாஜக 83 வார்டுகளையும் சிவ சேனா 7 வார்டுகளையும் கைப்பற்றி உள்ளது. இங்கு அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 37 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
வசை விரார் மாநகராட்சி: வசை விரார் மாநகராட்சியை பிராந்திய கட்சியான பகுஜன் விகாஸ் அகாதி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 115 வார்டுகளில் 69 வார்டுகளில் இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அடுத்ததாக பாஜக 44 வார்டுகளிலும், சிவ சேனா ஒரு வார்டிலும், காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
கல்யாண் தோம்பிவ்லி மாநகராட்சி: கல்யாண் தோம்பிவ்லி மாநகராட்சியை பாஜக - சிவ சேனா கூட்டணி கைப்பற்றியுள்ளது. இங்கு மொத்தமுள்ள 122 வார்டுகளில், 97 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், சிவ சேனா 45 வார்டுகளிலும், பாஜக 41 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. சிவ சேனா (உத்தவ்) 4 வார்டுகளிலும், எம்என்எஸ் 4 வார்டுகளிலும் காங்கிரஸ் 2 வார்டுகளிலும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
மீரா பையந்தர் மாநகராட்சி: மீரா பையந்தர் மாநகராட்சியை பாஜக - சிவ சேனா கூட்டணி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 95 வார்டுகளில் 84 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், பாஜக 67 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சிவ சேனா 2 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் 13 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
உல்ஹாஸ் நகர் மாநகராட்சி: உல்ஹாஸ் நகர் மாநகராட்சியையும் பாஜக - சிவ சேனா கூட்டணி தன் வசப்படுத்தி உள்ளது. மொத்தமுள்ள 78 வார்டுகளில் 72 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில், சிவ சேனா 36 வார்டுகளிலும், பாஜக 32 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.
ஷம்பாஜிநகர் மாநகராட்சி: ஷம்பாஜிநகர் மாநகராட்சியை பாஜக-சிவ சேனா கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 115 வார்டுகளில் 106 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், பாஜக 56 வார்டுகளிலும், சிவ சேனா 14 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏஐஎம்ஐஎம் 24 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சிவ சேனா(உத்தவ்) 6 வார்டுகளிலும் காங்கிரஸ் 1 வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
நாக்பூர் மாநகராட்சி: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகமான நாக்பூர் மாநகராட்சியை பாஜக மொத்தமாக கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 151 வார்டுகளில் 148 வார்டுகளின் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், பாஜக 103 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. சிவ சேனா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 33 வார்டில் வெற்றி பெற்றுள்ளது. சிவ சேனா (உத்தவ்) 2 வார்டில் வெற்றி பெற்றுள்ளது. சரத் பவார் மற்றும் அஜித் பவார் தலா ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளனர்.
கோலாபூர் மாநகராட்சி: கோலாபூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 81 வார்டுகளில் பாஜக - சிவ சேனா கூட்டணி 41 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக 26 வார்டுகளிலும், சிவ சேனா 15 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 34 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 4 வார்டுகளிலும், சிவ சேனா (உத்தவ்) ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள போதிலும் இங்கும் பாஜக - சிவ சேனா கூட்டணி மாநகராட்சியை தங்கள் வசப்படுத்த வாய்ப்புகள் உள்ளன.
சோலாப்பூர் மாநகராட்சி: சோலாப்பூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள 102 வார்டுகளில் இதுவரை 87 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், பாஜக 74 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவ சேனா 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் ஒரு வார்டில் வெற்றி பெற்றுள்ளது.
லாட்டூர் மாநகராட்சி: லாட்டூர் மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 70 வார்டுகளில் காங்கிரஸ் 43 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 22 வார்டுகளிலும், அஜித் பவாரின் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
நான்டெட் வகாலா மாநகராட்சி: நான்டெட் வகாலா மாநகராட்சியை பாஜக-சிவ சேனா கூட்டணி கைப்பற்றுகிறது. மொத்தமுள்ள 81 வார்டுகளில் இதுவரை 67 வார்டுகளுக்கான முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில், பாஜக 43 வார்டுகளிலும், சிவ சேனா 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏஐஎம்ஐஎம் 14 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
சங்லி மிராஜ் குப்வாத் மாநகராட்சி: சங்லி மிராஜ் குப்வாத் மாநகராட்சியும் பாஜக கூட்டணி வசம் வந்துள்ளது. மொத்தமுள்ள 78 வார்டுகளில், பாஜக 39 வார்டுகளிலும், சிவ சேனா 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 18 வார்டுகளிலும், அஜித் பவாரின் கட்சி 16 வார்டுகளிலும், சரத் பவாரின் கட்சி 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
துலி மாநகராட்சி: துலி மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 74 வார்டுகளில் பாஜக 50 வார்டுகளிலும், சிவ சேனா 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஏஐஎம்ஐஎம் கட்சி 10 வார்டுகளிலும், அஜித் பவாரின் கட்சி 8 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
ஜால்னா மாநகராட்சி: ஜால்னா மாநகராட்சியை பாஜக - சிவ சேனா கூட்டணி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 65 வார்டுகளில் பாஜக 41 வார்டுகளிலும், சிவ சேனா 12 வார்டுகளிலும் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றி உள்ளன. இங்கு காங்கிரஸ் 9 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.
இச்சால்கரண்ஜி மாகராட்சி: இச்சால்கரண்ஜி மாகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றி உள்ளது. மொத்தமுள்ள 65 வார்டுகளில் இக்கூட்டணி 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில், பாஜக 43 இடங்களிலும், சிவ சேனா 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சிவ சேனா(உத்தவ்) ஒரு வார்டிலும், அஜித் பவாரின் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன.
மொத்தமுள்ள 29 மாநகராட்சிகளில், பாஜக - சிவ சேனா கூட்டணி 15-க்கும் மேற்பட்ட மாநகராட்சிகளை கைப்பற்றுகிறது. மற்ற மாநகராட்சிகளில் பெரும்பாலானவற்றிலும் இக்கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிர ஆளும் கட்சியான பாஜகவும் சிவ சேனாவும் களத்தில் மிகவும் வலுவாக இருப்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் கூட்டணி அமைத்ததால் அது இந்த தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பேசப்பட்டது.
எனினும், அந்த அணி வலுவாக இருப்பதாக சொல்லப்பட்ட மும்பையில் கூட மேயரை தேர்வு செய்யும் பலத்தைப் பெறவில்லை. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) ஆகிய கட்சிகளும் செல்வாக்கை பெருமளவில் இழந்துள்ளதை இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன.