

தமிழக அரசியலில் தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாஜக போராடுகிறது. அதற்காக அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை தன் பக்கம் அணி சேர்த்திருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் தமிழக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். தேர்தலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி, வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. தமிழகத்தின் நலன், வளர்ச்சி, சமத்துவம் மற்றும் சமூக நீதியைக் காக்கும் கொள்கைக் கூட்டணியாகும். இந்த அணியின் வெற்றிக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழுமையாகப் பணியாற்றி வருகிறது.
அதேநேரம் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும், தமிழக அரசியலில்தனக்கென்று ஒரு இடத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாஜக போராடுகிறது. அதற்காக அதிமுக உள்ளிட்ட சில கட்சிகளை தன் பக்கம் அணி சேர்த்திருக்கிறது. எந்த அணி தமிழகத்தின் நலனுக்கு ஏற்றது? என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். பாஜக தமிழத்தில் காலூன்ற கூடாது.
பாஜகவோடு அதிமுக அணி சேர்ந்தாலும் சரி, வேறு எந்த கட்சி அணி சேர்ந்தாலும் சரி அவர்களும் இந்த தேர்தலில் வீழ்த்தப்பட வேண்டும். தமிழக நலன் காக்க, திமுக கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.