

சென்னை: வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தடையின்றி சீராக நடந்து வருகிறது. மக்கள் வழக்கமான சுழற்சியில் சிரமமின்றி சிலிண்டர்களைப் பெற்று வருகின்றனர் என்று எண்ணெய் நிறுவனங்களின் தமிழகம், புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் தற்போது எந்தவித தடையும் இல்லாமல், முறையாக, பாதுகாப்பாக நடந்து வருகிறது. இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களிடம் எல்பிஜி சிலிண்டர்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளன. விநியோக ஏற்பாடுகளும் வலுவாக உள்ளன.
எங்களது சிலிண்டர் நிரப்பும் ஆலைகள், போக்குவரத்து வசதிகள், விநியோக அமைப்புகள் அனைத்தும் ஒருங்கிணைந்த முறையில் சிறப்பாக செயல்படுகின்றன. இதன்மூலம், மக்கள் தங்களது எல்பிஜி சிலிண்டர்களை வழக்கமான சுழற்சியில் சிரமமின்றி பெற முடிகிறது. எனவே, மக்கள் தேவையற்ற கவலை கொள்ள வேண்டாம். அச்சத்துடன் முன்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும்.
போதுமான கையிருப்பு: தமிழகம், புதுச்சேரி முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகமும் முறையாக நடைபெறுகிறது. அனைத்து முக்கிய முனையங்கள், கிடங்குகளில் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்கள் வரை விநியோகச் சங்கிலி சீராக இயங்குகிறது. எங்கும் பற்றாக்குறை ஏற்படாத வகையில் எண்ணெய் தொழில் துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
வர்த்தக எல்பிஜி விநியோகத்தில் அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க ஒரு திட்டமிட்ட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், 70 சதவீதம் அளவுக்கு மருத்துவமனைகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள், சமுதாய சமையலறைகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதனால் முக்கிய சேவைகள் தடையின்றி தொடர்ந்து இயங்க ஆதரவளிக்கிறோம். ஏதேனும் அவசரத் தேவைகள் எழுந்தால், அதையும் உடனடியாக கவனித்து தேவைக்கேற்ப சேவை அளிக்க தயாராக இருக்கிறோம். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, 5 கிலோ எல்பிஜி சிலிண்டர் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இது எளிதாக கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.