

ராமநாதபுரம்: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் சூறாவளி புயல் எச்சரிக்கையால், தமிழகத்தில் சென்னை, பாம்பன் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் - நிக்கோபர் தீவுகள், அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு -வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (அக்.31) காலை 11.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அந்தமானின் ஸ்ரீவிஜயபுரத்திற்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 330 கி.மீ தொலைவிலும், கார் நிக்கோபாரிற்கு மேற்கு-வடமேற்கே 300 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 1140 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே 1200 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்திற்குள் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதிகளில் சூறாவளி புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது. இது நவம்பர் 2ம் தேதி மாலையில், ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகில், மேற்கு-மத்திய வங்காள விரிகுடா பகுதியை வந்தடையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து இன்று மாலை ராமேசுவரம் அருகில் பாம்பன் துறைமுகம், சென்னை, எண்ணூர், கடலூர், நாகப்பட்டினம், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.