

சென்னை: இலங்கை அருகே உருவாகியுள்ள ‘டித்வா’ புயல் நவ.30-ம் தேதி அதிகாலை வட தமிழகத்தை நெருங்கும். இதன் காரணமாக தஞ்சை, நாகை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பி.அமுதா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ‘டித்வா’ புயலாக வலுப்பெற்று, சென்னையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது வடமேற்காக நகர்ந்து, வடதமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை 30-ம் தேதி அதிகாலை நெருங்கும்.
இதன் காரணமாக தென் தமிழகத்தில் இன்று (நவ.28) பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நாளை (நவ.29) வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், 30-ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்யக்கூடும். அதனால், 4 மாவட்டங்களுக்கும் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழை (‘ரெட் அலர்ட்’) பெய்யக்கூடும். தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
30-ம் தேதி திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று காலை முதல் தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 90 கி.மீ. வேகத்திலும், நாளை 100 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.