ராமநாதபுரம்
சென்னை: சென்னைக்கு தெற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ள டிட்வா புயல், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்பகுதியை நாளை அதிகாலை அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இலங்கையின் கடலோர பகுதியிலும், அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலிலும் உருவான டிட்வா புயல், கடந்த 6 மணி நேரத்தில் 8 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.
காலை 5.30 மணி நிலவரப்படி இந்த புயல், இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு கிழக்கு-தென்கிழக்கே 80 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும், காரைக்காலுக்கு தெற்கு-தென்கிழக்கே 190 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 300 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு தெற்கே 400 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கில் நகர்ந்து நாளை (நவ. 30) அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்பகுதியை அடையும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்: டிட்வா புயல் காரணமாக மிக கனமழை பெய்யக்கூடும் என்பதால் கடலூர், மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் காரணமாக சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 2,500 கனஅடி நீரும், சோழவரத்தில் இருந்து 400 கனஅடி நீரும், செம்பரம்பாக்கத்தில் இருந்து 1,200 கனஅடி நீரும் செங்குன்றத்தில் இருந்து 1,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஆந்திரப் பிரதேச கடற்கரையை ஒட்டி நாளை காலை டிட்வா புயல் வலுவிழுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் அம்மாநிலத்தின் நெல்லூர், சித்தூர், திருப்பதி, அன்னமய்யா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்: டிட்வா புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள், புதுச்சேரி, காரைக்கால் என 9 துறைமுகங்களில் 4-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.