

சி.வி.சண்முகம்
விழுப்புரம்: “பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திமுக ஒன்றியச் செயலாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் எம்எல்ஏ லட்சுமணன் அறிக்கை வெளியிடுகிறார். பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரை திமுக காப்பாற்றுகிறது” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி. கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த திருவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். வானூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளரான இவர் மீது, 35 வயது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது தொடர்பாக கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் இன்று கூறியது: “திமுக ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை பாஸ்கரன் கைது செய்யப்படவில்லை.
அதேநேரத்தில், பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக, விழுப்புரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் லட்சுமணன் எம்எல்ஏ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். திட்டமிட்டு வீண் பழி சுமத்திவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பாலியல் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை என்று விசாரணை நடத்தி, உண்மையை உறுதி செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். லட்சுமணன் நீதிபதியாகிவிட்டாரா? திமுக மாவட்டச் செயலாளரின் அறிக்கை முதல்வர் ஸ்டாலின் ஒப்புதலுடன் வெளியானதா?
காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தும் சூழலில், குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளது, வழக்கை இப்படிதான் விசாரிக்க வேண்டும் என்று காவல் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறதா?
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்ற திமுக முயற்சி செய்கிறது. பாஸ்கரன் மீது அவதூறு பரப்பியதாக கூறும் லட்சுமணனுக்கு தைரியம் இருந்தால், என் மீது வழக்கு தொடரட்டும். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை.
எனவே, பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்ட லட்சுமணன் எம்எல்ஏ மற்றும் குற்றவாளியைக் கைது செய்யாத காவல் துறையைக் கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளை (நவ. 27) மாலை மெழுகுவத்தி ஏற்றிப் போராட்டம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.