தமிழகம் முழுவதும் 702 ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை: ஆர்டிஐ தகவலில் அதிர்ச்சி

கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on
1 min read

சென்னை: தமிழகம் முழுவதும் 702 ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை உள்ளதாக ஆர்டிஐ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணன், தமிழகத்தில் உள்ள சென்னை - திருச்சி - மதுரை- சேலம் உள்ளிட்ட 4 ரயில்வே கோட்டங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் காலிப் பணியிடம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.

அதற்கு பதில் அளித்த சம்பந்தப்பட்ட கோட்ட அதிகாரிகள், சென்னை ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர் பணியிடங்கள் - 2,047, நடப்பு பணியிடங்கள்- 1,586, காலிப் பணியிடங்கள் 461 எனவும், திருச்சி ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர் பணியிடங்கள் 447, நடப்பு பணியிடங்கள் 372, காலிப் பணியிடங்கள் 75 எனவும் பதிலளித்துள்ளனர்.

அதேபோல், மதுரை ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர் பணியிடங்கள் - 491, நடப்பு பணியிடங்கள் 411, காலிப் பணியிடங்கள் 80 எனவும், சேலம் ரயில்வே கோட்டத்தில் அனுமதிக்கப்பட்ட ரயில் ஓட்டுநர் பணியிடங்கள் 642, நடப்பு பணியிடங்கள் 556, காலிப் பணியிடங்கள் 86 எனவும் பதில் அளித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் 3,627 லோகோ பைலட்டுகள் பணியாற்ற வேண்டிய இடத்தில் 2,925 பேர் மட்டும் பணியாற்றுகிறார்கள். அதாவது 702 பேர் பற்றாக்குறை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் கூடுதல் ரயில்கள் இயக்க முடியாமலும், ஏற்கெனவே உள்ள ரயில் ஓட்டுநர்கள் மன அழுத்தத்துடன் பணிபுரிவதாலும் பயணிகள் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. எனவே, ரயில் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் பாண்டியராஜா கூறுகையில், “தமிழ்நாடு முழுவதும் ரயில் ஓட்டுநர்கள் பற்றாக்குறை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதன் காரணமாக ரயில் ஓட்டுநர்கள் கடும் மன அழுத்தத்தில் அதிக பணிச்சுமைக்கு ஆளாகின்றனர். இது ரயில் பயணிகளின் பாதுகாப்பில் நேரடி தொடர்புடையது.

மேலும் மதுரை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு ரயில் தேவை மிக அதிகமாக உள்ளது. ரயில் ஓட்டுநர் பற்றாக்குறை காரணமாக கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத நிலை உள்ளது. பண்டிகை காலங்களில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்க முடியவில்லை.

எனவே ரயில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கூடுதல் ரயில் தேவைகளை கருத்தில்கொண்டு தமிழத்தில் உள்ள 702 ரயில் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
“கம்பீர் பற்றி கவலை இல்லை... இது வெட்கக் கேடான ஆட்டம்!” - ஸ்ரீகாந்த் கடும் சாடல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in