

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் துக்கு எஸ்பி மதிவாணனை சந்திக்க ஆதரவாளர்கள் புடைசூழ வந்த சி.வி.சண்முகம் எம்எல்ஏ.
விழுப்புரம்: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சி.வி.சண்முகம் எம்எல்ஏ கட்சியில் ஓரங்கட்டப்பட்டுள்ளார். அவரது ஆதரவாளர் களுக்கும், பழனிசாமியின் ஆதரவாளர்களுக்கும் கடந்த 3 மாதங்களாக மோதல் போக்கு நீடிக்கிறது. ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக்கொள்கின்றனர்.
இந்நிலையில், தனக்கு ஆதரவு தெரிவிக்கும் பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் எதிர்த் தரப்பினர் அவதூறு பரப்பி வருவதாகவும், வல்லம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் அவமதிக்கப்பட்டதாகவும் கூறி தங்கள் தரப்பில் புகார்கள் மீதான நடவடிக்கை குறித்து எஸ்பி மதிவாணனிடம் கேட்டறிய, விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்துக்கு சி.வி.சண்முகம் நேற்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
திண்டிவனத்தில் இருந்து புறப்பட்டு வந்தவரை வரவேற்க விழுப்புரத்தில் அவரது ஆதரவாளர்கள் திரளாக காத்திருந்தனர். பின்னர், சுமார் 25 கார்கள் மற்றும் 200 ஆதரவாளர்கள் புடைசூழ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்துக்கு காலை 11.25 மணிக்கு சி.வி.சண்முகம் வந்து சேர்ந்தார்.
அவருடன் வந்தவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டிடத்துக்குள் திபுதிபுவென நுழைந்தனர். மேலும் எஸ்பியின் அறை அமைந்துள்ள முதல் தளத்துக்கு சென்றனர். சொற்ப எண்ணிக்கையில் இருந்த போலீஸாரால், அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
எஸ்பி மதிவாணனை சந்தித்துவிட்டு நண்பகல் 12 மணிக்கு கீழே இறங்கி வந்த சி.வி.சண்முகம், பிரதான வாயிற் கதவு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் எஸ்பி மதிவாணனை விமர்சித்தபோது, அவருடன் இருந்தவர்கள் கரவோஷம் எழுப்பினர்.
எஸ்பி அலுவலகத்துக்கு கூட்டமாக வருபவர்களை பாதுகாப்பு பணியில் இருக்கும் போலீஸார் அனுமதிப்பது கிடையாது. பேட்டி கொடுக்கவும் அனுமதி இல்லை. ஆனால், ஆதரவாளர்கள் புடைசூழ சி.வி.சண்முகம் வருகை தர இருப்பதை உளவு துறையினர் முன்கூட்டியே உள்ளூர் போலீஸாருக்கு தெரிவிக்க தவறிவிட்டனர்.
இதனால், பாதுகாப்பு பணிக்கு 10 போலீஸார் கூட இல்லை. சி.வி.சண்முகம் ஆதரவாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர்.
கூட்டத்தினர் திரண்டது, போலீஸார் கோட்டைவிட்டது போன்ற செயலால், புதன்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு வந்த வர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.
‘பெண்கள் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்’
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பி மதிவாணனை சந்தித்த சி.வி.சண்முகம் பின்னர் செய்தியாளர்களிடம், “அதிமுகவில் என்னுடைய ஆதரவாளர்களும், பெண் நிர்வாகிகளாக இருந்தவர்களையும் பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர். மார்பிங் மூலம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பெண்களை குறி வைத்து தாக்கும் கலாச்சாரத்தை விழுப்புரம் மாவட்டத்தில் முன்பு பார்த்தது இல்லை. அதிமுக - திமுக ஆளுங்கட்சி - எதிர்க்கட்சியாக இருந்தபோதும், குடும்ப பெண்களை தரம் தாழ்ந்து பேசவில்லை.
பெண்களை பாதுகாக்க ‘சிங்கப்பெண் அதிரடி படை’யை முதல்வர் விஜய் உருவாக்கி இருக்கிறார். ‘நல்லாட்சி தர வேண்டும்’ என்றே முதல்வர் நினைக்கிறார். ஆனால் அவருக்கு கீழே பணியாற்றும் போலீஸார் மாறவில்லை.
இப்பிரச்சினை தொடர்பாக 7 புகார்கள் கொடுக்கப்பட்டும் பலனில்லை. இதுபற்றி எஸ்.பியிடம் கேட்டதற்கு, ‘7 ஆண்டுகள் தண்டனைக்கு உட்பட்ட குற்றங்கள் மீது சிஎஸ்ஆர் வழங்கப்பட்டு, விசாரிக்கப்படும்.
அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஆலோசனைக்கு பிறகே வழக்குப்பதிவு செய்யப்படும். தேவைப்பட்டால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். கைது நடவடிக்கை எடுக்கப்படாது’ என்று கூறுகிறார். இந்தப் பதில் அதிர்ச்சியைத் தருகிறது.
7 ஆண்டு தண்டனைக்கு உட்பட்ட குற்றங்களில் ஈடுபடுபவர்கள் இனி அச்சப்பட தேவையில்லை. காவல்துறைக்கு உரிய அறிவுறுத்தலை வழங்கி, பெண்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிக்கு முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.