

கோப்புப் படம்
காஞ்சிபுரம்: பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்துக்காக நிலம் வழங்கிய விவசாயிகள், தற்போது விளைவித்துள்ள நெல்லை அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்காகப் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களை அரசுக்கு வழங்கி உள்ளனர்.
இதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொண்ட நிலையில், அந்த நிலங்கள் வருவாய்த் துறையினரால் அரசு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன. இருப்பினும், திட்டப் பணிகள் முழுமையாகத் தொடங்காத நிலையில், அந்த நிலங்களில் விவசாயிகள் தொடர்ந்து நெல் சாகுபடி செய்துள்ளனர்.
தற்போது அறுவடை முடிந்து, விளைவித்த நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். அங்கு நெல்லை விற்பனை செய்ய ‘அடங்கல்’ சான்றிதழ் கட்டாயம் எனக் கேட்கப்படுகிறது.
நிலங்கள் அரசு பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டதால், கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் சான்றிதழ் பெறுவதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. அரசு கொள்முதல் நிலையங்களில் விற்க முடியாததால், வேறு வழியின்றி தனியார் வியாபாரிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்துக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது தங்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டப் பகுதி விவசாயிகள் தங்களது நெல்லை எவ்விதத் தடையுமின்றி அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய, மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிளார் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்கக் கோரி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் கே.எழிலன் தலைமையில் நேற்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதில், நெல் மூட்டைகளைப் பெறுவதற்கு பணம் கேட்பது, இடைத்தரகர்கள் மூலம் முறையற்ற வசூல் நடப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டது. நெல் கொள்முதல் நிலையங்களை உழவர் உற்பத்தியாளர் குழுக்களிடம் ஒப்படைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.