

சென்னை: அனைத்து விவசாயிகளுக்கும் ரூ.75 ஆயிரம் வரை பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என பேச்சுவார்த்தையின்போது தமிழக அரசு உறுதியளித்துள்ளதாக விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் அரசு சார்பில் நேற்று முன்தினம் 4-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, வினோத் காந்திராஜ், ரமேஷ், விஜய் பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இதில் சில கோரிக்கைகள் ஏற்கப்பட்டதை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக விவசாயச் சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாய சங்கக் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன் கூறும்போது, “பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முழு உடன்பாடு ஏற்படவில்லை. அரசு வழங்கிய சலுகைகள் விவசாயிகளுக்கு திருப்தியளிக்கவில்லை.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெறப்பட்ட கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதற்கு பதிலாக, விவசாயிகள் பெற்றுள்ள அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
அரசுக்கு நிதி நெருக்கடி இருப்பதால் வேறு வழியின்றி தற்போதைய முடிவுகளை அரைமனதுடன் ஏற்று போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். விவசாயிகளிடம் கடனை வசூலிக்க அரசு நெருக்கடி கொடுத்தால், அடுத்தகட்டப் போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்” என்றார்.
ரூ.2,228 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர்கள், துறை செயலர்களுடனான பேச்சுவார்த்தையில், அரசின் நிதி நெருக்கடியைக் கருத்தில்கொண்டு, 2025-26-ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை கடன் பெற்ற சிறு, குறு மற்றும் இதர விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் வரை தள்ளுபடி செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே ரூ.6,024 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதைய அறிவிப்பின் மூலம் கூடுதலாக ரூ.2,228 கோடி சேர்த்து மொத்தம் ரூ.8,312 கோடி ஒதுக்கீடு செய்வதாக அரசு உறுதியளித்துள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்ற நிபந்தனையை நீக்கி அனைத்து விவசாயிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். புதிய கடன் பெறுவதற்காக விவசாயிகள் ஏற்கெனவே செலுத்திய கடன் தொகையையும் தள்ளுபடியில் சேர்க்க வேண்டும் என்றும் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர். தற்போதைய நிதிநிலையைக் கருத்தில்கொண்டு எடுக்கப்பட்டுள்ள முடிவை வரவேற்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.