

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கோதையாற்றில் 9 மாதங்களாக மக்களை அச்சுறுத்திய முதலை பிடிபட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே கோதையாற்றில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதலை நடமாட்டம் இருந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்து வீடியோவாக பதிவு செய்தனர். இதையடுத்து முதலையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக சென்னையில் இருந்து சிறப்புக் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். பல்வேறு உத்திகளை கையாண்டும் முதலை பிடிபடவில்லை.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் களியல் ஆற்றுப் பாலம் அருகே முதலை உலாவியதை அறிந்த குழுவினர் மீண்டும் கோதையாற்று பகுதிக்கு வந்து முகாமிட்டு கண்காணித்தனர். பின்னர், முதலை நடமாட்ட வழிகளில் வலை கட்டப்பட்டது. நேற்று காலை ஒருநிலக்கல் ஆற்றுப்பாலம் அருகே கட்டப்பட்டிருந்த வலையில் முதலை சிக்கியது. சுமார் 9 மாதங்களுக்கு மேலாக போக்கு காட்டிய முதலை பிடிபட்டிருப்பதால், அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
வலையில் சிக்கிய முதலை சுமார் 300 கிலோ எடை கொண்டது. முதலையை மீட்ட வனத்துறை ஊழியர்கள், அதை ஜீரோ பாயிண்ட் வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகே, முதலையை எங்கு கொண்டுவிடுவது என்ற விவரம் தெரியவரும்.