

தமிழ் மொழியின் பெருமைகளை பிரதமர் மோடி பட்டியலிட்டுப் பேசுவது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக அவர் போடும் வேஷம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி, ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழ் மொழியின் பெருமைகளைப் பற்றியும், ‘தமிழ் கற்கலாம்’ என்பது குறித்தும் புளகாங்கிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மொழியின் பெருமைகளைப் பட்டியலிட்டுப் பேசுவது 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரதமர் மோடி போடும் வேஷம். எனவே, தேர்தல் வரை இதுபோன்ற பொய்க்குரலை அவரிடம் இருந்து அடிக்கடி கேட்க வேண்டியிருக்கும்.
இதைத்தான் ‘உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது’ என்பார்கள் முன்னோர்கள். தமிழகத்துக்கு வெற்றுப் புகழுரைகள் தேவை அல்ல. உரிமைக்கான நிதி ஒதுக்கீடும், மத்திய அரசின் திட்டங்களில் தமிழருக்குரிய இடமும்தான் தேவை. பேச்சில் இருக்கும் தமிழ் மீதான பாசம், அவரது செயலில் இருக்கும் பாரபட்சமான கொள்கைகளால் முறிக்கப்படுகிறது. இது இரட்டை வேட அரசியல்.
தமிழகத்தில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர் பணிகளுக்காக சமீபத்தில் நடைபெற்ற போட்டித் தேர்வில், தமிழ் பாடத் தேர்வில் 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்துள்ளனர் என்பது மிகுந்த வருத்தத்துக்குரிய செய்தி. இதில் யாரை குற்றம் சொல்வது? தாய்மொழி தமிழ் பாடத்தில் தோல்வியடைந்தது குறித்து ஆசிரியர்களும், சமூகமும் கவலைப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.