

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் | கோப்புப் படம்
மார்கசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து தி.நகரில் உள்ள கட்சி மாநில தலைமை அலுவலகத்தில், வேட்பாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
அப்போது கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கடந்த முறை கொடுத்த வாக்குறுதிகளில் 90 சதவீதத்துக்கு மேல் நிறைவேற்றியுள்ளது. இதையடுத்து தற்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கை, இதுவரை வெளிவந்திருக்கும் தேர்தல் அறிக்கைகளில் சூப்பர் ஸ்டார் அறிக்கையாக அமைந்துள்ளது.
தமிழகத்தில் எந்தவொரு அரசியல் கட்சியும் மதுக்கடைகளை மூடுவோம் என்ற வாக்குறுதியை அளிக்கவில்லை. பூரண மதுவிலக்கு என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்றாகும். தவெக தலைவர் விஜய் எங்கு சென்றால் கூட்டம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை. திரையில் பார்த்த நடிகர், தெருவுக்கு வந்துள்ளார் என்பதற்காக தான் மக்கள் அவரை பார்க்க வருகின்றனர். அவர்கள் அரசியல் தலைவர் என்பதற்காக பார்க்க வந்தார்களா? அல்லது வேடிக்கை பார்க்க வந்தார்களா? என்பது வாக்கு எண்ணிக்கையின் போது தான் தெரியும்.
அதேநேரம் அவர் மாற்று அரசியல் தலைவராகவும், ஆட்சி மாற்றத்திற்கான தலைவராகவும் தமிழக மக்கள் கருதுகிறார்களா? என்று கேட்டால் அதற்கு கடுகளவு கூட வாய்ப்பு இல்லை. தவெக பிரச்சாரத்துக்கு காவல்துறை முறையாக பாதுகாப்பு கொடுக்கவில்லை என்கின்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், அனைத்து கட்டுப்பாடுகளும் தேர்தல் ஆணையத்திடம் தான் உள்ளது.
அவர்களிடம் தான் நேரடியாக முறையிட்டு நிவாரணம் தேட வேண்டும். இது கூட தெரியாமல் திமுக மீது குற்றம்சாட்டுகின்றனர். வாழ்நாளிலேயே விஜய் இப்போது தான் முதல் முறை தலைமை செயலகம் சென்று இருக்கிறார் என்று நினைக்கிறேன். திமுகவுக்கும், எனக்கு தான் போட்டி என்கிறார். ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என அவர் கூறிய பிறகும் அவருடன் யாரும் கூட்டணிக்கு செல்லாததே தமிழகத்தில் அவரை எந்த கட்சியும் நம்பவில்லை என்பதற்கு சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.