

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம்.
புதுக்கோட்டை: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்பதைவிட, அந்த கூட்டணியே தற்போது இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஏதாவது ஒரு கட்சியை அழிக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். அதற்கு அதிமுக பலியாகி இருக்கிறது. அடுத்த தேர்தலுக்கு அதிமுக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் நாங்கள் இருக்கிறோமா, இல்லையா என்பதைவிட அந்த கூட்டணியே தற்போது இல்லை என்பதுதான் முக்கியமானது. அதேநேரத்தில், தமிழகத்தின் நலன் சார்ந்த பிரச்சினையில் திமுகவுடன் இணைந்து போராடுவோம்.
தேசிய ஜனநாயக கூட்டணியும் தற்போது இல்லை. ஏனெனில், தவெக அரசின் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் அந்தக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகள் எதிர்த்தும், ஆதரித்தும் வாக்களித்தன. சில கட்சிகள் நடுநிலை வகித்தன. இவை அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம். அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததை கடுமையாக எதிர்த்தோம். இல்லையேல், அந்த எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். எம்எல்ஏக்கள் கட்சி மாறுவது தவறு. ஆனால், மற்றவர்கள் கட்சி மாறுவது சகஜமானதுதான்.
இந்த அரசு 3 மாதம்கூட தாங்காது என்று திமுக தலைவர்ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி போன்ற தலைவர்கள் பேசுவது தவறானது. தமிழகத்தில் லாட்டரிச் சீட்டு அறவே வரக்கூடாது. தமிழகத்தில் பாஜக எடுபடாததால் மோடி, அமித்ஷா ஆசியுடன் ஆர்எஸ்எஸ்-ன் இன்னொரு அமைப்பை அண்ணாமலை தொடங்கியுள்ளார். அதில் பல லட்சம் பேர் இணைந்ததாக ஒரு பிம்பத்தை கிளப்பிவிட்டுள்ளார்.