‘எளிய மக்கள் மீதான தாக்குதல்’ - யுபிஐ கட்டணத்துக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

‘எளிய மக்கள் மீதான தாக்குதல்’ - யுபிஐ கட்டணத்துக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
Updated on
1 min read

சென்னை: யுபிஐ பணப் பரிவர்த்தனை மீதான கட்டணத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பாஜக அரசு, மக்களை பணமில்லா பரிவர்த்தனைகளுக்குள் வலுக்கட்டாயமாக தள்ளியதை தொடர்ந்து, தற்போது யுபிஐ கட்டமைப்பில் கோடிக்கணக்கான வணிகர்களும், பொதுமக்களும் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், வரும் அக்.15-ம் தேதி முதல் ரூ.2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வணிகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்படும் எனவும், ரயில்வே, தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் ரூ.5 நிலையான கட்டணம் விதிக்கப்படும் எனவும் இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.

யுபிஐ பரிவர்த்தனைகள் இலவசம் என்பதை மாற்றி கட்டணம் விதிக்கப்பட்டு இருப்பது எளிய, நடுத்தர மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும். இது வணிகர்களுக்கான கட்டணம் என்று கூறப்பட்டாலும், விலைவாசி உயர்வுக்கே வழிவகுக்கும்.

வரிச் சுமைகள், பல்வேறு சேவைகளுக்கு கட்டணங்கள் என்பதால் அல்லலுறும் மக்கள் மீது இன்னொரு சுமை ஏற்றப்பட்டுள்ளது. சொந்தப் பணத்தை மக்கள் கையாள்வதற்கே கட்டணம் செலுத்தும் நிலையை உருவாக்கி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஏற்கெனவே, வங்கி பரிவர்த்தனை சார்ந்து பல்வேறு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்கான அபராதம் வழியாகவும் தனியார் வங்கிகள் கோடிக் கணக்கில் பணத்தை குவிக்கின்றன.

இப்போது கட்டணக் கொள்ளையில் யுபிஐ நிறுவனங்களும் கூடுதலாக இணைந்துள்ளன. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் முடிவை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் இலவசமாகவே தொடர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘எளிய மக்கள் மீதான தாக்குதல்’ - யுபிஐ கட்டணத்துக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளோம்” - அமைச்சர் ரமேஷ் பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in