“தமிழகத்தில் தவெக, அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்” - கே.பாலகிருஷ்ணன்

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

புதுச்சேரி: “தமிழகத்தில் விஜய்யின் தவெக மற்றும் அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ராஜாங்கத்தை ஆதரித்து லாஸ்பேட்டை உழவர் சந்தை எதிரில் அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், உழவர்கரை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் நாரா கலைநாதனுக்கும், திருபுவனை தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கமயூனிஸ்ட் வேட்பாளர் தட்சிணாமூர்த்திக்கும் கே.பாலகிருஷ்ணன் திறந்த வாகனத்தில் சென்று தனித்தனியாக வாக்கு சேகரித்து பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசும்போது, “புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி செய்த என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு இரட்டை இஞ்சின் ஆட்சி என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பேசி வருகின்றனர். ஆனால் அதற்கு மாறாக எந்த வளர்ச்சி திட்டங்களும் நிறைவேற்றாத ஆட்சியாளராக செயல்பட்டுள்ளனர். மீண்டும் அவர்களுக்கு வாக்களித்தால் பழைய ஈயம் பித்தளைக்கு புதுச்சேரியை விற்று விடுவார்கள்.

சிறிய மாநிலமான புதுச்சேரியில் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை. மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் கூட இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை. தொழில் வளர்ச்சி அற்ற மாநிலமாகவே புதுச்சேரி உள்ளது. இரட்டை இஞ்சின் ஆட்சி என்று சொல்லி பல ஆயிரம் கோடி போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கி ஊழல் செய்ததுதான் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசின் மிகப் பெரிய சாதனை” என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.பாலகிருஷ்ணன், "புதுச்சேரியில் 4 இடதுசாரி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இங்கு தனித்தனியாக தேர்தலைச் சந்தித்தாலும் மாற்று ஆட்சியை அமைப்போம். இண்டியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் நாங்கள் போட்டியிடும் இடங்களில் எங்களை ஆதரிக்கிறார்கள். அக்கட்சிப் போட்டியிடும் இடங்களில் நாங்கள் ஆதரிக்கிறோம். கடந்த என்.ஆர். காங்கிரஸ் - பாஜக ஆட்சி புதுச்சேரியைச் சீரழித்துவிட்டது.

போலி மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் எப்படி ஜாமீனில் வெளியே வந்தார்கள்? வாக்குச் சேகரிக்கும்போது முதல்வர் ரங்கசாமி தன்னுடைய ஆட்சியின் சாதனையாக இதையெல்லாம் சொல்லிக் கேட்க வேண்டும். ஓர் அதிகாரியைக் கூட மாற்ற தனக்கு அதிகாரம் இல்லையென்று கூறிய முதல்வர் ரங்கசாமி, நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக அமர்ந்தால் இந்த அதிகாரம் எல்லாம் கிடைத்துவிடுமா? பெயருக்கு வேண்டுமென்றால் முதல்வராக இருக்கலாம். ஆட்சி, அதிகாரம் எல்லாலம் பாஜகவிடம்தான் இருக்கும்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் செய்தார். அதேபோன்று எடப்பாடி பழனிசாமி மீது டி.டி.வி. தினகரனும், தினகரன் மீது எடப்பாடி பழனிசாமியும் விமர்சனம் வைத்தனர். இப்போது எல்லாம் சரியாகவிட்டதா? இப்போது இந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைவராகிவிட்டார். டி.டி.வி. தினகரன் சேவகராகிவிட்டார். பாமகவில் அப்பா மகன் பிரச்சினையைத் தீர்க்க முடியவில்லை. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் , செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்தத் தலைவர்களை எல்லாம் எடப்பாடி பழனிசாமி விரட்டி விட்டார். எடப்பாடி பழனிசாமி மட்டும் இருக்கும் அதிமுக சிதைந்துவிட்டது.

சிதைந்துபோன கட்சிகளை எல்லாம் வைத்துக் கொண்டு அது எப்படி பலமான கூட்டணியாக இருக்க முடியும்? தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்பதை மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே ஒப்புக் கொண்டுதான் தவெக விஜய் ஆதரவுடன் தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைப்போம் என்று கூறியுள்ளார். தமிழகத்தில் விஜய்யின் தவெக மற்றும் அதிமுக - பாஜக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி படுதோல்வியைச் சந்திக்கும” என தெரிவித்தார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர்.சி-க்கு எதிர்ப்பு: புதிய நீதி கட்சி அமைப்புச் செயலாளர் திடீர் விலகல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in