

தொகுதி மறுவரையறை திட்டத்தை ஆதரித்து தென் மாநிலங்களுக்கு அதிமுக துரோகம் இழைப்பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியனை ஆதரித்து, கே.பாலகிருஷ்ணன் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தேர்தல் பணிகளுக்கு இடையிலேயே ஒரு தீமூட்டுகிற போராட்டத்தை நடத்த வேண்டிய கட்டாயத்தை பிரதமர் மோடி உருவாக்கிவிட்டார்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு தினம். அவசர அவசரமாக, அரசியல் ஆதாயத்துக்காக நாடாளுமன்றத்தை அவசரமாகக் கூட்டி ஒரு மோசமான சதித் திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற உள்ளார். கேட்டால், நாங்கள் மகளிருக்கான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றப் போகிறோம் என்று கூறுகிறார்கள்.
ஆனால், மகளிருக்கான இட ஒதுக்கீடு என்ற போர்வையில் தொகுதி மறுவரையறை சட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்ற இருக்கிறார். இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து 850 ஆக உயர்த்தப்படும்.
இதன்மூலம் வட மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை உயர்வதுடன், தென் மாநிலங்களில் அதன் எண்ணிக்கை கணிசமாக குறையும். இப்படி நடந்தால் பரம்பரை பரம்பரையாக தமிழகமும், தென் மாநிலங்களும் புறக்கணிக்கப்படும். இந்தியாவில் வடக்கு, தெற்கு என்று பிரிவினை உருவாகும்.
இந்த திட்டத்தை ஆதரித்து தமிழகத்துக்கு மட்டுமின்றி, தென் மாநிலங்களுக்கே அதிமுக துரோகம் இழைக்கிறது. அனைத்தையும் மீறி இந்தச் சட்டம் நிறைவேற்றப்படுமானால், ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தைப் போல மிகப்பெரிய போராட்டத்தை இந்தியா எதிர்கொள்ளும். இவ்வாறு அவர் பேசினார்.