

சென்னை: சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ‘டேப்ஸ்’ ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் க.மாரிமுத்து வேண்டுகோள் விடுத்தார்.
சட்டப்பேரவையில் நேற்று மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அவர் பேசியது: ஊரக வளர்ச்சித் துறையில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் விண்ணப்பித்தோருக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை. ஓய்வூதிய பலன்கள் கிடைக்க தொடர்ந்து போராடி கொண்டிருக்கிறார்கள். பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (சிபிஎஸ்) நடைமுறைப்படுத்தப்பட்ட கடந்த 1.4.2003 முதல் 31.12. 2025 வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காதா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் வாக்குறுதியின்படி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லாதபட்சத்தில் கடந்த ஜன.1 முதல் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்படுவதைப் போன்று, சிபிஎஸ் திட்டத்தில் ஓய்வுபெற்ற அனைத்துஊழியர்களுக்கும் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டமான டேப்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு பேசினார்.