“தவறான ஆட்சி முறைக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை” - மு.வீரபாண்டியன்

 மு.வீரபாண்டியன்

மு.வீரபாண்டியன்

கோப்புப் படம் 

Updated on: 
2 min read

சிவகங்கை: “சமூக விரோத செயல், சமூகப் பதற்றம், தவறான ஆட்சி முறைக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் அளித்த தீர்ப்புக்காக ஆளுநர் ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காகதான் ஆதரவு கொடுத்தோம்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “சிவகங்கையில் வன்முறைகளும், போதை கலாச்சாரங்களும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. தமிழக அரசு கூடுதலாக கவனம் செலுத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குற்றச் செயல்களுக்கு போதை கலாச்சாரம் மட்டும் காரணம் என்று கூற முடியாது. வேலையில்லா திண்டாட்டமும் முக்கிய காரணமாக உள்ளது. சிறு, குறு தொழில்களை ஊக்கப்படுத்தி அரசு வேலைவாய்ப்பை அதிகரிப்பதோடு, இளைஞர்களை வாசிப்பு பழக்கத்துக்கும், விளையாட்டுக்கும் மாற்றினால் குற்றச் செயல்களை குறையும்.

மேகேதாட்டு அணை பிரச்சினை குடிநீர் பிரச்சினை மட்டுமல்ல; தேச ஒருமைப்பாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை. தமிழகம் தேசிய உணர்வு மிகுந்த மாநிலம், அதனால் இப்பிரச்சினையில் பிரதமர் மோடி பார்வையாளராக இருக்கக் கூடாது. தமிழகத்துக்கு உரிய நீரை பெற்று தர வேண்டும். இது சலுகை அல்ல; தமிழகத்துக்கான உரிமை.

தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு திருப்திகரமாக இல்லை என்பது உண்மைதான். அதே சமயத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்ட மாநிலம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தக் கூடாது. சட்டம் - ஒழுங்கு பிரச்சினை குறித்து ஆளுநரை அழைத்து பிரதமர், உள்துறை அமைச்சர் விளக்கம் கேட்பதாக இருந்தால், முதலில் உத்திரப் பிரதேச மாநிலத்தை தான் கேட்க வேண்டும்.

இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதியான மாநிலம் என்பதை பிரதமர், உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் விளக்க வேண்டும்.

சமூக விரோத செயல், சமூகப் பதற்றம், தவறான ஆட்சி முறைக்கு நாங்கள் ஆதரவு கொடுக்கவில்லை. மக்கள் அளித்த தீர்ப்புக்காக ஆளுநர் ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காகத்தான் ஆதரவு கொடுத்தோம். சட்டம் - ஒழுங்கு பிரச்சினைக்கு எந்த காரணத்தையும் கூறக் கூடாது. பாலியல் வன்கொடுமைக்கு எந்த விதத்திலும் சமரசம் கூடாது. தமிழக மக்களை பாதுகாப்பதற்காக அரசு களப்பணி ஆற்ற வேண்டும்.

சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முதல்வர் அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கினால் பிழையாகிவிடும். நேர்மையான அதிகாரிகளுக்கு மட்டுமே முழு சுதந்திரம் வழங்க வேண்டும். அதிகார வர்க்கம் அனைத்தும் நேர்மையானது என்று கூறி விட முடியாது.

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் 13 கோடி பேரின் வாக்குகள் பறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாக்கு கூட பறிக்க கூடாது என்று விஜய் நடித்த திரைப்படம் வெற்றி பெற்றது. ஆனால் 13 கோடி வாக்குகள் பறிக்கப்பட்டது குறித்து முதல்வர் வாய் திறக்க மறுக்கிறார். இது குறித்து வாய் திறந்து பேச வேண்டும். இதை முதல்வர் கண்டிக்க வேண்டும்.

புத்தகங்களில் முறைகேடு குறித்து வெளிப்படையான விசாரணை நடத்தி தவறு செய்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் எந்தவிதமான ஊழலும் நடைபெறாத வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அனுப்பிய வாட்ஸ்ஆப் பதிவை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் எது உண்மை, பொய் என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.

தவெக அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தால், ஆதரவு குறித்து எங்களது மாநில குழு முடிவு எடுக்கும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போடக்கூடாது. ஒன்றிய அரசிடமோ, மாநில அரசிடமோ அதிகாரம் குவியக் கூடாது. அதிகாரம் பரவலாக்கல் அவசியம். உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைப்பதன் மூலம் ஜனநாயகம் தோற்றுக் கொண்டிருக்கிறது.

இடதுசாரி சிந்தனையில் உள்ளவர்கள், தமிழ் தேசியம், பெரியார், அம்பேத்கர் கருத்துகளை பேசுபவர்கள் ஒரு புள்ளியில் இணைய வேண்டும். இந்தியாவில் பிற கட்சிகளை விட இடதுசாரி கொள்கை உள்ள குழுக்கள் அதிகம் உள்ளன. அவை அனைத்தும் ஒருக்கிணைந்தால் வாகை சூட முடியும்” என்று அவர் கூறினார்.

<div class="paragraphs"><p> மு.வீரபாண்டியன்</p></div>
“கள்ளக்குறிச்சி ‘குறுஞ்செய்தி’ சம்பவம் நடக்கவே இல்லை” - அமைச்சர் நிர்மல் குமார்

X