“தலைமைச் செயலகம் என்பது அதிகார வர்க்க கூடம் அல்ல... மக்கள் அதிகார அடையாளம்!” - மு.வீரபாண்டியன்

மு.வீர​பாண்​டியன்

மு.வீர​பாண்​டியன்

Updated on
2 min read

சென்னை: “மக்கள்தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள். தங்களது கோரிக்கைகளை நம்பிக்கையுடன் சொல்ல வரும்போது, அலைக்கழிப்படுவது நாடாளுமன்ற நோக்கங்களை சிதைத்துவிடும். எளிய மக்கள், முதல்வரை சந்திப்பது எளிதாக்கப்பட வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீரபாண்​டியன் தெரி​வித்​தார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “தலைமைச் செயலகம் என்பது மக்கள் அதிகாரத்தின் அடையாளம். அதிகார வர்க்கத்தின் கூடம் அல்ல. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசாங்கத்தின் அதிகார வடிவம் அது. எனவே அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ சந்திப்பதில் எந்த சிரமமும் இருக்கக் கூடாது. இப்போது இருக்கும் கட்டுப்பாடுகள் ஏற்புடையதல்ல. நாட்டை ஆள்வது அதிகார வர்க்கம் அல்ல. அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் மக்களின் சேவகர்கள்.

மக்கள்தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள். தங்களது கோரிக்கைகளை நம்பிக்கையுடன் சொல்ல வரும்போது, அலைக்கழிப்படுவது நாடாளுமன்ற நோக்கங்களை சிதைத்துவிடும் என இடதுசாரிகள் கருதுகின்றன. எளிய மக்கள், முதல்வரை சந்திப்பது எளிதாக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

நமக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட ரஷ்யா நமக்கு எண்ணெய் வழங்கியுள்ளது. பல அரபு நாடுகள் உதவியுள்ளன. இதை பிரதமர் மோடி மூடி மறைக்கிறார். வெனிசுலா நாட்டு அதிபரை சிறை வைத்து எண்ணெய் திருட்டில் அமெரிக்கா ஈடுபட்டு இருக்கிறது. அதற்கு தலைமை தாங்கி இருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவரும் இந்தியாவின் நெருக்கடியை தீர்க்க முன்வரவில்லை. அவ்வாறு திருடப்படுகின்ற எண்ணெய் நமக்கு தேவையில்லை.

ஒருநாள் யுத்தம் என்றாலும் கூட உலகத்தில் உள்ள அனைத்து மூலைகளும் பாதிக்கப்படும். லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கே பணி புரிகிறார்கள். அவர்களின் வாழ்வாதாரம், பணி பாதுகாப்பு, உயிர் பாதுகாப்பு என எதைப் பற்றியும் எந்த அறிக்கையும் பிரதமர் மோடி வெளியிடவில்லை. அங்கு இருக்கும் தூதரக அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

கரோனா காலத்தில், ராணுவத்துக்கு நிகராக பணி செய்தவர்கள் தூய்மை பணியாளர்கள். இந்த ஒன்றை நினைவில் வைத்தாவது அரசு அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சட்டமன்றத்திலும் இது குறித்து வலியுறுத்துவோம்” என்று அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் கூறுகையில், “தமிழக மக்களின் நலன்சார்ந்த பிரச்சினைகளுக்கு, மாற்று கொள்கையை முன்வைக்கும் வகையில் ஒரு கூட்டு பிரகடனத்தை வெளியிடுவது என முடிவெடுத்துள்ளோம். வரும் 4-ஆம் தேதி இது வெளியிடப்படும்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் அமித் ஷா, காவல் துறைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். அமைச்சர் தர்மேந்திர சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் முடிவுக்கு வரும்.

அயோத்தி ராமர் கோயிலில் காணிக்கை திருட்டு நடைபெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை கொள்ளப்பட வேண்டும். குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில், அதிகாரிகளின் அணுகுமுறை உள்ளது.

பழநி நில மோசடி விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். நீதிமன்றத்தையே ஏமாற்றியிருக்கிறார்கள். தமிழகத்தில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய மோசடி இது. இந்த விசாரணை முறையாக நடைபெற வேண்டும்.

தவெக அரசோ, அமைச்சர்களோ இந்த விஷயத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை. பத்திரப் பதிவு துறை அதிகாரிகள் நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர். பல உயர்மட்ட அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அனைத்து தூய்மை பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

<div class="paragraphs"><p>மு.வீர​பாண்​டியன்</p></div>
“மின் கட்டண குளறுபடிகளுக்கு தீர்வு காணாவிட்டால் பாஜக போராட்டம்” - நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in