

திண்டுக்கல்: “இந்தியத் தொழில்நுட்பங்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதே நவீன சுதேசியின் அடிப்படை” என குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள காந்திகிராம கிராமிய பல்கலையின் 39-வது பட்டமளிப்பு விழா, பல்கலை கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவுக்கு வேந்தர் அண்ணாமலை தலைமை வகித்தார். துணைவேந்தர் பஞ்சநதம் வரவேற்றார். ஆளுநர் அர்லேக்கர், குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.
விஞ்ஞானி நம்பி நாராயணன், குன்றங்குடி அடிகளார், பேராசிரியர் சொ.மீ.சுந்தரம் ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து 1,300 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஆளுநர் அர்லேக்கர் பேசியது: “காந்தியின் கொள்கைகளை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும். சுதேசி பொருட்களை வாங்க வேண்டும் என்பது காந்தியின் கொள்கை.
நிகர்நிலை பல்கலை.யாக உள்ள காந்திகிராம பல்கலை, முழுமையான பல்கலை.யாக மாறவேண்டும். கிராம பொருளாதாரம் என்பதுதான் நாட்டின் முதுகெலும்பு போன்றது” என்றார்.
மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது: “பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் எல்லா செல்வமும், வளமும், மகிழ்ச்சியும் பெறவேண்டும் என வாழ்த்துகிறேன்.
காந்திகிராம பல்கலை.யில் உலகில் சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இருப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். ‘வாய்மையே வெல்லும்’ என்பதுதான் காந்தியின் வார்த்தை.
ஆங்கில ஆட்சியாளர்களை கத்தி கொண்டும், பீரங்கி கொண்டும் எதிர்க்காமல், தான் வைத்திருந்த கைத்தடியை மட்டுமே வைத்து விரட்டியவர் காந்தியடிகள்.
எந்த இடத்தில் சத்தியம் இருக்கிறதோ அந்த இடத்தில் வெற்றி நிரந்தரம் என்பதை இது பறைசாற்றுகிறது. கிராமங்களின் முன்னேற்றம் என்ற காந்தியின் தத்துவத்தை நிறைவேற்ற இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இன்று இந்தப் பல்கலை. தழைத்து நிற்கிறது. நல்லதை நினைத்து நல்லதே செய்வோம் என்று சொன்னால் அதன் வெற்றி இன்று இத்தனை பட்டதாரிகளை தந்திருக்கிற ஒரு மகத்தான நிறுவனமாக காந்திகிராம பல்கலை. உள்ளது.
காந்தியடிகளின் கொள்கை கிராமங்களின் முன்னேற்றம். நம்முடைய பாரதப் பிரதமர் கூட அதையேதான் சொல்கிறார். இந்த தேசத்தில் இருக்கும் கடைக்கோடி கிராமம் கூட முன்னேறிய கிராமமாக இருக்கவேண்டும். உண்மை இருக்கும் இடத்தில் வெற்றி தானாக வந்து சேரும் என்று காந்தி குறிப்பிட்டிருக்கிறார்கள். அது இன்று நடைமுறையில் சாத்தியமாகி கொண்டுள்ளது.
இந்தியாவின் வலிமை கிராமங்களின் வலிமை. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும். கிராமங்களின் வளர்ச்சி என்பது தேசிய வளர்ச்சியின் அடிப்படைகளில் ஒன்றாகும். ஒவ்வொரு கிராமமும் நகரமாக மாறவேண்டும் என்று நான் சொல்லவில்லை. மாறாக, ஒவ்வொரு கிராமத்திலும் நகர்புறங்களில் கிடைக்கும் அத்தனை வசதிகளும் கிராமத்திலும் கிடைக்கவேண்டும் என்பது தான் நமது சிந்தனையாக இருக்கிறது.
தங்களுடைய தேவைகளை தாங்களே பூர்த்தி செய்யவேண்டிய நிலை கிராமங்களில் ஏற்பட்டால் தான் அது மகத்தான வளர்ச்சியாக முன்னேற்றமாக மாறும்.
கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி ஆட்சியில் கிராம வளர்ச்சியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. வீடுதோறும் மின்சாரம், குடிநீர் வசதி, சாலைகள் அமைக்கப்பட்டுவருகிறது. பட்டினிச் சாவு இல்லாத உன்னத தேசத்தை பிரதமர் உருவாக்கியுள்ளார். 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர்.
‘ஜல் ஜீவன் இயக்கம்’ மூலம் பல கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உலகை வேகமாக மாற்றி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை நாம் விரைவாகக் கற்றுக்கொள்ள வேண்டும்.
காந்தியடிகளின் சுதேசிக் கொள்கை இன்றைய காலத்ததுக்கும் பொருந்தக் கூடியது. உள்நாட்டு உற்பத்தி, உள்ளூர் தொழில்கள், இந்தியத் தொழில்நுட்பங்கள் மற்றும் இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதே நவீன சுதேசியின் அடிப்படை.
பட்டம் பெறுவது உங்கள் கல்வியின் முடிவு அல்ல. சமூகத்துக்கும் நாட்டுக்கும் பங்களிப்பதற்கான தொடக்கம்.
இளைய தலைமுறையினர் தற்காலத்தில் மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் போதைப்பொருள் பழக்கத்திலிருந்து முற்றிலும் விலகி இருக்க வேண்டும்.
தங்களை மட்டுமின்றி தங்களைச் சார்ந்த சமூகத்தையும் போதைப்பொருள் இல்லாச் சமுதாயமாக உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளையும் நவீன திறன்களையும் ஏற்றுக்கொண்டு முன்னேறும் அதே நேரத்தில், நமது பண்பாட்டையும் மனிதநேயப் பண்புகளையும் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது” என்றார்.