‘கரோனா’ பெருந்தொற்று காலம் திருமண பந்தத்தை அழித்து விட்டது: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை

தமிழகம் முழுவதும் 2020 - 22ல் அதிக விவாகரத்து வழக்குகள்
‘கரோனா’ பெருந்தொற்று காலம் திருமண பந்தத்தை அழித்து விட்டது: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை
Updated on: 
2 min read

சென்னை: கரோனா பெருந்தொற்று காலம் மனித உயிர்களை மட்டுமின்றி கணவன் - மனைவி இடையிலான திருமண பந்தத்தையும் வேரோடு அழித்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் 2020-2022 காலகட்டத்தில் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இளம் தம்பதியருக்கு இடையிலான குடும்பத் தகராறு தொடர்பான வழக்கை விசாரித்த ஆலந்தூர் சார்பு நீதிமன்றம், மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சமாக மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் வழங்க கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கணவர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து, மனைவிக்கு இடைக்கால ஜீவனாம் சமாக மாதம்தோறும் ரூ.10 ஆயிரத்தை கணவர் வழங்க வேண்டும் என்ற ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தும், கடந்த 2023 முதல் ஆலந்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குடும்பத் தகராறு வழக்கை 4 மாதங்களில் முடிக்க வேண்டும் என ஆலந்தூர் நீதிமன்றத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவு: இந்த வழக்கு மட்டுமின்றி, கடந்த 3 மாதங்களாக என்னிடம் விசாரணைக்கு வரும் அனைத்து குடும்பத் தகராறு வழக்குகளின் பின்னணியையும் ஆராய்ந்தால், அனைத்து திருமணங்களும் கரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்ட 2019-2022 காலகட்டத்தில் நடந்தவை என்பது தெரியவந்துள்ளது.

95 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகளில், தம்பதிகள் 6 முதல் 9 மாதம் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துள்ளனர். அதிலும் சிலர் 3 மாதங்கள் மட்டுமே கணவன் - மனைவியாக வாழ்க்கை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக, கரோனா காலபொது முடக்கம், தம்பதிகளை வீட்டுக்குள்ளேயே முடக்கிவிட்டது. இது அவர்களிடம் அன்யோன்யத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பரஸ்பர புரிந்துகொள்ளும் தன்மை, வி்ட்டுக்கொடுக்கும் மனப்பான்மை ஆகியவை அற்றுப்போய் இருவரது நல்ல மற்றும் மோசமான குணநலன்கள் வெளிப்பட்டு, எதிர்காலம் குறித்த பயம், அழுத்தம் அவர்களை ஆட்கொண்டுள்ளது.

ஒருவேளை, இது அவர்களது திருமண உறவில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். இதன் காரணமாகவே, ஓராண்டு காலத்துக்குள் அவர்கள் திருமண பந்தத்தை முறித்துக்கொள்ள நேரிட்டு இருக்கலாம்.

கரோனா காலம் மனித உயிர்களை மட்டுமின்றி கணவன் - மனைவி இடையிலான திருமண பந்தத்தையும் வேரோடு அழித்துவிட்டது. எனவே, 2020-2022 காலகட்டத்தில் குடும்ப நல நீதிமன்றங்களில் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்குகளை தனியாகப் பிரித்து புதிய கோணத்தில் விசாரித்து தீர்வு காண்பது அவசியம்.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மை நீதிபதிகளும் அந்த காலகட்டங்களில் தொடரப்பட்டு நிலுவையில் உள்ள விவாகரத்து உள்ளிட்ட குடும்பத் தகராறுகள் தொடர்பான வழக்குகளின் விவரங்களை சேகரித்து, நவ.27-ம் தேதிக்குள் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அந்த அறிக்கை கிடைத்ததும், குடும்ப நல வழக்குகளில் அனுபவமிக்க வழக்கறிஞர்களின் உதவியுடன், சம்பந்தப்பட்ட தம்பதிகள் இடையே இணக்கமான சூழலை ஏற்படுத்தி சுமுகத் தீர்வு காண முடியுமா என்பது குறித்து ஆராயப்படும். இதன்மூலம் இளம் தம்பதிகளின் சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் வாழ்வில் ஒன்றிணைய வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். இவ்வாறு அந்த உத்தரவில் நீதிபதி தெரிவித்துள்ளார்.

‘கரோனா’ பெருந்தொற்று காலம் திருமண பந்தத்தை அழித்து விட்டது: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் வேதனை
சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை: பாரிமுனையில் 17.5 செ.மீ பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in