

சென்னை: ‘தவெக-வுக்கு ஆதரவாக செயல்பட்ட 21 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது என சட்டப்பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானதுதான்’ என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில், தவெக அரசு கடந்த மே 13 அன்று நம்பிக்கை தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்எல்ஏ-க்கள் அதிமுக கொறடா உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதையடுத்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தார்.
இதற்கிடையே, அதில் 4 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், எஞ்சிய 21 பேரும் மன்னிப்பு கோரியதால் அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை திரும்பப் பெறுவதாக பழனிசாமி மீண்டும் பேரவைத் தலைவருக்கு கடிதம் கொடுத்தார். அதையடுத்து அவர்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிடுவதாக உத்தரவிட்டார்.
பேரவைத் தலைவரின் இந்த கைவிடுதல் உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் பி.வி.செல்வக்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ‘கட்சி கொறடா உத்தரவை மீறி செயல்பட்ட அந்த நிமிடமே அவர்களுக்கும் அந்த கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்கிறபோது, அவர்கள் மன்னிப்பு கோரிவிட்டனர் எனக்கூறி மீண்டும் அவர்களை கட்சியில் சேர்த்தது தவறு. அவர்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை பேரவைத் தலைவர் கைவிட்டதும் தவறு’ என கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், ‘கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏ-க்கள் 15 நாள்களுக்குள் மன்னிப்பு கோரியதை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் சட்டப்பூர்வமாக ஏற்றுள்ளார். கட்சிக்குள் நடைபெறும் இந்த நிகழ்வு குறித்து வெளியில் உள்ள மூன்றாவது நபர் கேள்வி எழுப்ப முடியாது.
பொதுச் செயலாளரின் கடிதத்தை ஏற்று பேரவைத் தலைவரும் அந்த எம்எல்ஏ-க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிட்டுள்ளார். இதில் எந்த தவறும் இல்லை. எனவே தவெக-வுக்கு ஆதரவாக செயல்பட்ட 21 அதிமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிரான தகுதி நீக்க நடவடிக்கையை கைவிடுவது என சட்டப்பேரவைத் தலைவர் எடுத்த முடிவு சரியானதுதான்’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.