

கோப்புப்படம்
புதுடெல்லி: இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) இறங்கி உள்ளது. இதற்காக, அகில இந்திய அளவில் ஒரு ஒருங்கிணைப்புக் கூட்டம் விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 19 முதல் 21 வரை நடைபெறுகிறது.
ஜந்தர் மந்தர் மற்றும் ராஞ்சியில் நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் வெற்றி பெற்றன. இதனால், இளைஞர்கள் மீதான கவனத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அதிகரித்துள்ளனர்.
எனவே, இக்கூட்டத்தில் பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட ஆர்எஸ்எஸ்ஸின் 32 அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
அகில இந்திய அளவிலான இந்த ஒருங்கிணைப்புக் கூட்டம் விசாகப்பட்டினத்தில் ஆகஸ்ட் 19 முதல் 21 வரை நடைபெறுகிறது. இந்த வருடாந்திர ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபலே, அனைத்து இணைச்செயலாளர்கள் மற்றும் பிற மத்திய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
மொத்தம் 327 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்கூட்டத்தில் இளைஞர்களை மையமாகக் கொண்ட ஒரு செயல் திட்டத்தை ஆர்எஸ்எஸ் உருவாக்க உள்ளது.
இவர்களை தன் அரசியல் பிரிவான பாஜகவிற்காகத் தேர்தல் பணிகளில் பயன்படுத்தவும் திட்டமிடப்படுகிறது.
இது குறித்து அகில இந்தியப் பிரச்சாரப் பிரிவுத் தலைவர் சுனில் அம்பேகர் கூறுகையில்: ‘இக்கூட்டத்தில் இளைஞர் இயக்கங்கள், கல்வி மற்றும் தேர்வு முறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் முக்கிய விவாதமாக இருக்கும். இத்துடன் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ள வேலைவாய்ப்பு விவகாரம் குறித்தும் விவாதிக்கப்படும்.
சுயதொழிலை ஊக்குவிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். வரவிருக்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் அதிக அளவில் பங்குபெற சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்து விலக்கி வைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் அந்தத் திசையில் அனைத்து அமைப்புகளும் என்ன செய்யலாம் என்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.’ என்று தெரிவித்தார்.
மேலும், போதைப்பொருள் மீட்பு நடவடிக்கைகளுடன், இளைஞர்களை விழிப்புணர்வுடன் செயல்பட வைப்பதற்கான பிற தலைப்புகளும் விவாதிக்கப்பட உள்ளன.
நாட்டின் தற்போதைய நிலை, சமூக மாற்றம் மற்றும் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆகியவை இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது.
மக்கள் தொகை சமநிலையின்மை, மக்கள் தொகை மாற்றத்தின் விளைவுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
தனது நூற்றாண்டை கொண்டாடும் ஆண்டில், இளைஞர்கள் மத்தியில் தமது அமைப்பு மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளதாக ஆர்எஸ்எஸ் கருதுகிறது.
ஏனெனில், ஜனவரி மற்றும் ஜூலை 2025-க்கு இடைப்பட்ட காலத்தில் 55,423 இளைஞர்கள் தங்கள் விருப்பத்தேர்வில் ஆர்எஸ்எஸ்ஸில் இணைந்துள்ளனர்.
ஆர்எஸ்எஸ் இணையதளம் மூலம் இணைந்தவர்களுக்கு ‘Join RSS’ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 2026 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில், இந்த எண்ணிக்கை இரண்டரை மடங்கு அதிகரித்து 1,23,287-ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் சுமார் 65 சதவீதம் பேர் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.